Paristamil Navigation Paristamil advert login

ராகுல் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவமதிப்பு: காங்., கூட்டத்தை புறக்கணித்தார் சசி தரூர்

ராகுல் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவமதிப்பு: காங்., கூட்டத்தை புறக்கணித்தார் சசி தரூர்

24 தை 2026 சனி 12:54 | பார்வைகள் : 704


கேரள சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நேற்று நடந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தை, அக்கட்சியின் மூத்த தலைவரும், லோக்சபா எம்.பி.,யுமான சசி தரூர், 69, புறக்கணித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.

கேரளாவில், மார்க்.கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.

தேர்தல் பிரசாரம்

இங்கு, வரும் ஏப்ரலில், தமிழகத்துடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதை முன்னிட்டு, கேரளாவில் தற்போதே தேர்தல் பிரசாரம் களைகட்டி உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த உள்ளாட்சி தேர்தலில், காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அபார வெற்றி பெற்றது. இதில் வென்ற வேட்பாளர்களை கவுரவிக்கும் வகையில், கடந்த 19ல், கொச்சியில் காங்., சார்பில் விழா நடந்தது.

இதில், அக்கட்சியைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பங்கேற்றார். தவிர, காங்., நிர்வாகிகள் சசி தரூர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய ராகுல், மேடையில் இருந்த காங்., நிர்வாகிகளின் அனைவரது பெயரையும் குறிப்பிட்ட நிலையில், சசி தரூரின் பெயரை மட்டும் குறிப்பிடவில்லை.

அதே போல, சசி தரூர் பேசி முடித்த பின், ராகுல் பேசுவார் என, முதலில் கூறப்பட்டிருந்தது. ஆனால், சசி தரூர் பேசி முடித்த பின், மற்ற நிர்வாகிகளும் நிகழ்ச்சியில் பேசினர். இதை, தன் 'சீனியாரிட்டி'க்கு இழைக்கப்பட்ட அவமானமாக அவர் கருதுகிறார்.

இதனால் அதிருப்தி அடைந்த சசி தரூர், கட்சி மேலிடம் தன் பங்களிப்பை தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும், கேரள காங்., நிர்வாகிகள் தன்னை அவமதிப்பதாகவும், தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறி வருத்தப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், கேரள சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்க, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், டில்லியில் நேற்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், ராகுல், பொது செயலர் வேணுகோபால், கேரள காங்., மாநில தலைவர் சன்னி ஜோசப், கேரள சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சதீஷன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் பங்கேற்க வரும்படி சசி தரூருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. ஆனால், கூட்டத்தை  அவர் புறக்கணித்தார். அதே சமயம், கோழிக்கோட்டில் நடந்த கேரள இலக்கிய திருவிழாவில் பங்கேற்றார். ராகுல் பங்கேற்ற நிகழ்ச்சியில் அவமதிக்கப்பட்டதாலேயே ஆலோசனை கூட்டத்தை சசி தரூர் வேண்டு மென்றே புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது.

சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சசி தரூருக்கும், கேரள காங்., நிர்வாகிகளுக்கும் இடையே முட்டல், மோதல் நீடிப்பது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்