37 ஆண்டுகளுக்கு பின் வெளியாகும் ரஜினி படம்!
23 தை 2026 வெள்ளி 15:13 | பார்வைகள் : 225
இந்தியத் திரையுலகத்தின் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம், பெங்காலி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். 80களில் ஹிந்திப் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த சமயத்தில் 1989ல் தயாரான ஒரு படம் 'ஹம் மே ஷஹென்ஷா கோன்'.
நடிகை ரீனா ராய் சகோதரர் ராஜா ராய் தயாரித்த இந்தப் படத்தை ஹர்மேஷ் மல்கோத்ரா இயக்க, லட்சுமிகாந்த் பியாரிலால் இசையமைக்க, ரஜினிகாந்த், சத்ருகன் சின்ஹா, ஹேமமாலினி, அனிதா ராஜ், பிரேம் சோப்ரா, மறைந்த நடிகர்கள் அம்ரிஷ் புரி, ஜெகதீப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
35 எம்எம் ஈஸ்ட்மென் கலரில் படமாக்கப்பட்ட இந்தப் படம் முழுவதுமாக முடிந்தும் சென்சார் செய்யப்படாமல் பட வெளியீட்டைப் பற்றி எதுவும் சொல்லாமல் தள்ளி வைத்தனர்.
படத்தின் தயாரிப்பாளர் லண்டன் சென்றுவிட்டார், அவருடைய மகன் அகால மரணமடைந்தார். அடுத்து படத்தின் இயக்குனர் ஹர்மேஷ் மல்கோத்ராவும் காலமானார். இப்படி சில பல காரணங்களால் அந்தப் படத்தின் வெளியீடு இத்தனை வருட காலமாக நடக்காமல் போனது.
இருப்பினும் படத்தின் இணை தயாரிப்பாளர்களான அஸ்லம் மிர்சா, ஷபானா மிர்சா படத்தை எப்படியாவது வெளியிட முயற்சித்து வந்தார்கள். தற்போது அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள். படத்தை ஏஐ மூலம் மீள்பதிவு செய்து, 4 கே தரத்தில், 5.1 ஒலி வடிவில் மாற்றி 37 ஆண்டுகளுக்கு பின் வெளியிட உள்ளார்களாம்.
இது குறித்து படத்தின் தயாரிப்பாளர் ராஜா ராய் கூறுகையில், “இந்தத் திரைப்படத்திற்காக நாங்கள் ஒருபோதும் நம்பிக்கையை இழக்கவில்லை. இது துயரம், பின்னடைவுகள் மற்றும் நீண்ட அமைதியைத் தாங்கியுள்ளது. இன்று, இது இறுதியாக அதன் பார்வையாளர்களைச் சந்திக்கும் என்பதில் நான் நன்றியுடன் உணர்கிறேன். இந்தத் திரைப்படம் எல்லா சவால்களுக்கும் எதிராக உயிர் பிழைத்துள்ளது. மற்றும் அதன் வெளியீடு விதியை நிறைவேற்றுவது போலத் தோன்றுகிறது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தின் வெளியீட்டிற்காக சம்பந்தப்பட்ட நடிகர்களிடம் இருந்து 'என்ஓசி' பெற்றுள்ளனர். இப்படத்தின் வெளியீடு குறித்து ரஜினிகாந்திடம் பேசி வருவதாகவும் அவரை விரைவில் நேரில் சந்தித்து பட புரமோஷனுக்கு வரும்படி கேட்க இருப்பதாகவும் இணை தயாரிப்பாளர் அஸ்லம் தெரிவித்துள்ளார்.
இந்தியத் திரையுலகத்தின் முக்கியமான கலைஞர்கள் பணியாற்றிய இந்தத் திரைப்படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இத்தனை ஆண்டு காலம் முடங்கிக் கிடந்த ஒரு படம் திரைக்கு வருவது இந்தியத் திரையுலகின் அதிசய ஆச்சரியம்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan