திரெளபதி 2 திரைப்படம் - சூப்பரா?
23 தை 2026 வெள்ளி 12:53 | பார்வைகள் : 200
14 ம் நுாற்றாண்டில் டில்லியை ஆண்ட துக்ளக், தேவகிரியை ஆண்ட அவர் தம்பி பல்வான், மதுரையை ஆண்ட தம்பானி ஆகியோரால் வட தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள். மதம் மாற மறுத்த மக்கள் என்னென்ன கொடுமைகளை அனுபவித்தார்கள். இவர்களை எதிர்த்து துணிச்சலுடன் போராடியவர்கள் யார்? அவர்களுக்கு நேர்ந்த கதி ஆகியவற்றை ரத்தம் தொய்ந்த வரலாற்று பதிவாக சொல்லும் படம் திரெளபதி 2.
அப்போது திருவண்ணாமலையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த வீர வல்லாளர்(நட்டி) என்ற மன்னரின் விசுவாசியான வீரசிம்ம காடவராயர் (ரிச்சர்ட்) என்ற தளபதியின் வீர வரலாற்றையும் இந்த கதை பேசுகிறது. டில்லி, மதுரை ஆட்சியாளர்களால் வல்லாளருக்கு பிரச்னைகள் ஏற்படுகிறது. அப்போது மன்னர் உயிரை காக்க, தங்கள் உயிரை விட துணியும் கருட படையை சேர்ந்த ரிச்சர்ட் அந்த சூழ்நிலையை எப்படி சமாளிக்கிறார். மக்களை எப்படி காப்பாற்றுகிறார், அவருக்கும், அவர் மனைவி திரவுபதிக்கும் எதிரிகளால் என்ன நேர்கிறது என்ற ரீதியிலும் கதை விரிகிறது. உண்மையான வரலாற்றில் கொஞ்சம் கற்பனை கலந்து திரைக்கதை எழுதியிருக்கிறார்கள்.
அந்த சமயத்தில் இருந்த அரசியல் நிலை, டில்லி சுல்தான் துக்ளக் ஆசை, அதை நிறைவேற்ற அவர்கள் செய்யும் காரியங்கள், அவர் பிரதிநிதியாக தேவகிரி, மதுரையில் ஆட்சியில் செய்த முஸ்லிம் மன்னர்களின் மனநிலை, இவர்களால் அப்பாவி மக்கள், இந்து அரசர்கள் பட்ட துன்பங்கள், போர், சூழ்ச்சி, தண்டனை, துரோகம், வீரம் என பல விஷயங்களை திரெளபதி 2 பேசுகிறது.
வீர வல்லாள மன்னர் கேரக்டருக்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் நட்டி. அவரின் நடை, உடை, ஆபரணங்களும் பக்காவாக செட்டாகி இருக்கிறது. வசன உச்சரிப்பில் மட்டும் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். பக்திமானாக திகழ்ந்த இவர் திருவண்ணாமலை கோபுரத்தை கட்டியிருக்கிறார். இவருக்கு மாற்று மத மன்னரால் ஏற்பட்ட அவலநிலை, அந்த தண்டனை கண்ணீர் விட வைக்கிறது.
வீரசிம்மன் என்ற தளபதி கேரக்டரில் வரும் ரிச்சர்ட் நடிப்பு, சண்டைக்காட்சிகள், ராஜ விசுவாசம், எதிரிகளை புத்திசாலிதனமாக அணுகும் விதம் ரசிக்க வைக்கிறது. ஆனாலும், அவரின் உடை, கெட்அப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். திரவுபதியாக, ரிச்சர்ட் மனைவியாக வரும் ரக் ஷனா கேரக்டர், அவர் வீரத்துடன் செய்யும் விஷயங்கள், கிளைமாக்சில் அவர் பொங்குவது மெய்சிலிர்க்க வைக்கிறது. வீர தமிழ் பெண்ணாக அவர் காண்பிக்கப்படுவது சிறப்பு.
வில்லன்களாக வரும் டில்லி சுல்தான் (சிராக் ஜானி), மதுரை தம்பானி (தினேஷ் லம்பா), தேவகிரி சுல்தான் பல்வான் ஆகியோர் நடிப்பு, அவர்கள் செய்யும் செயல்கள், டயலாக் ஆகியவை உண்மையிலே 3 பேர் மீது கடும் கோபத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் நடிப்பு அப்படி. அந்த காலத்தில் ஆட்சியாளர்கள் எவ்வளவு கொடூரமானவர்களாக இருந்து இருக்கிறார்கள். தங்கள் எண்ணத்தை நிறைவேற்ற எப்படியெல்லாம் மக்களை, ஆட்சியாளர்களை கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள். மத மாற்றங்கள் எப்படி நடந்தன என்பதை பல சீன்களின் விரிவாக சொல்லியிருக்கிறார் மோகன்.ஜி.
14 நுாற்றாண்டு கோட்டை, படைகள், அரண்மனை, போர், கோயில்கள் ஆகியவற்றை கமலின் ஆர்ட் வொர்க்கும், சுந்தரின் கேமரா வொர்க்கும் தெளிவாக, அழகாக காண்பிக்கிறது. ஆக் ஷன் சுந்தரின் சண்டைக் காட்சிகளும் ஓகே. பட்ஜெட் காரணமாக சில இடங்கள் ஏமாற்றம் அளித்தாலும், ஓரளவு பிரமாண்டத்தை காண்பித்து இருக்கிறார்கள். திரெளபதி 2 படத்தின் முக்கியமான நோக்கமே அந்த நுாற்றாண்டில் இருந்த ஆட்சியாளர்களின் கொடூரத்தை, மக்களின் தவிப்பை, குறிப்பாக, மதம் மாறுமாறு கட்டாயப்படுத்தியதை விவரிப்பதாக இருக்கிறது. மதம் மாற எப்படியெல்லாம் மிரட்டப்பட்டார்கள், மதம் மாறினால் வரி கட்ட வேண்டாம் என்று ஆசை காண்பிக்கப்பட்டார்கள். மதம் மாற வைக்க, அன்றைய ஆட்சியாளர்களை எப்படி சித்ரவதை செய்தார்கள் என்பதை பல வரலாற்று சம்பவங்களுடன், நெஞ்சு பதைக்கும்படி சொல்லியிருப்பது மனம் கலங்க வைக்கிறது. ஒய்.ஜி.மகேந்திரன் சம்பந்தப்பட்ட ஆன்மிக சீன், அந்த ராமர் பாடல் பக்தி பரவசம். ஜிப்ரான் பின்னணி இசை, எம்கோனோ பாடல் ஓகே. அந்த சுல்தான் அரண்மனை பாடல் ஒட்டவில்லை.
திரைக்கதையில் விறுவிறுப்பு அதிகரித்து இருக்கலாம். படத்தின் நீளத்தை குறைத்து இருக்கலாம். கிளைமாக்ஸ் இன்னும் அழுத்தமாக இருந்து இருக்கலாம். போர், சண்டைக்காட்சிகள் சுமார் என சில குறைகள் இருக்கின்றன. வரலாற்று படம் என்றாலும் ஒரு வித முழு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அரசர், தளபதி, உறவுமுறை, அவர்களின் கேரக்டரில் கொஞ்சம் குழப்பங்கள். திருப்பங்கள், பரபரப்பு இல்லாமல் வசனங்களால் நிறைந்து இருக்கும் காட்சிகள் போராடிக்க வைக்கிறது. ஆனாலும், இந்திய, தமிழக வரலாற்றின் இன்னொரு பக்கத்தை, மதத்தின் பெயரில் மக்கள், அரசர்கள் அனுபவித்த கொடுமைகளை துணிந்து சொன்ன விதத்தில், மதத்தை, மக்களை காக்க பலர் செய்த தியாகத்தை விவரித்து சொன்ன விதத்தில் திரெளபதி 2 முக்கியமான படமாக அமைகிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan