தமிழகத்தின் வளர்ச்சியை தடுக்கும் மத்திய அரசு! முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
23 தை 2026 வெள்ளி 10:53 | பார்வைகள் : 184
தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் தடைக்கற்களை மத்திய பாஜ அரசு தொடர்ந்து போட்டு வருகிறது என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
அவரது அறிக்கை: 'செந்தமிழைக் காப்பதற்குச் சேனை ஒன்று தேவை என்று நம் தாய்மொழியாம் தமிழ்மொழியை, ஹிந்தி ஆதிக்கத்திடமிருந்து காத்திட பாரதிதாசன் எழுதிய உணர்ச்சிமிக்க கவிதை வரிகள்தான் ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்கு முன், தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் ஊர்வலப் பாட்டாக ஒலித்தது. மொழியும் இனமும் திமுகவின் இரு கண்கள். அவற்றின் உரிமைகளைக் காப்பதற்காக உருவானதுதான் திமுக. அதிகார மனப்பான்மையுடன் மத்திய அரசு ஹிந்தியைத் திணிக்கும் வேலையைத் தொடர்ந்து செய்கிறது. இருமொழிக் கொள்கைக்கு மாற்றாக, ஹிந்தியைத் திணிக்கும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் கல்விக்கான நிதியைத் தருவோம் என்று தமிழகத்தை வஞ்சிக்கிறது.
தமிழ்மொழியின் மீது ஹிந்தி ஆதிக்கத்தையும், தமிழர்களின் பண்பாட்டின் மீது மதவெறிக் கலவரங்களையும் முன்னெடுத்து, தமிழகத்தின் வளர்ச்சியைத் தடுக்கும் தடைக்கற்களையும் மத்திய பாஜ அரசு தொடர்ந்து போட்டு வருகிறது. எத்தனை தடைகள் வந்தாலும் அவற்றைத் தகர்த்தெறியும் தடந்தோள்கள் எங்களுக்கு உண்டு என்ற உறுதியுடன், உங்களில் ஒருவனான என் தலைமையிலான அரசும், எனக்கு உறுதுணையாக நிற்கும் அன்பு உடன்பிறப்புகளான நீங்களும் எதிர்கொண்டு நிற்கிறோம்.
தமிழகத்துக்கு மத்திய பாஜ அரசு தொடர்ந்து செய்து வரும் வஞ்சகத்தைத் தட்டிக் கேட்கும் துணிச்சலும், நிமிர்ந்து நின்று எதிர்க்கும் முதுகெலும்பும்திமுகவிற்கே உண்டு. எதிர்க்கட்சியான அதிமுகவும் அதிலிருந்து உதிர்ந்த இலை - தழை - சருகுகளும் பழைய வழக்குகளின் கோப்புகள் தூசு தட்டப்படும் சத்தம் கேட்டதுமே, பயந்து நடுங்கி, டில்லிக்கு ஓடி பாஜவின் பாதம் பணிந்து நின்று விடுகின்றன.
மத்திய பாஜ அரசின் கைப்பாவைகளாகிவிட்ட அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை இன்னும் உள்ள புலனாய்வு அமைப்புகளை வைத்துத் திமுகவினரையும் முடக்கிவிடலாம் என்கிற சதித்திட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. நாம் பணிய மாட்டோம். துணிந்து நிற்போம். இனம் - மொழி - நிலம் காத்திடும் போரைத் தொடர்ந்திடுவோம்.தமிழகத்தை தலைகுனிய விடாமல், அனைத்து இலக்குகளிலும் மாநிலத்தை முன்னேற்றி வருகிற திராவிட மாடல் அரசின் சாதனைகளைத் தொகுதிகள் தோறும் முழங்குகின்ற பொதுக்கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.
தமிழகத்தை தலைகுனிய விடமாட்டோம் எனத் தொகுதிகள் தோறும் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்கள் பிப்ரவரி 28ம் தேதி வரை நடைபெறவுள்ளன. அத்துடன், ஜனவரி 26ம் தேதி டெல்டா மண்டல வெல்லும் தமிழ்ப் பெண்கள் மகளிர் மாநாடு எழுச்சியுடன் நடைபெறவிருக்கிறது. பிப்ரவரி 7ம் நாள் விருதுநகரில் நடைபெறும் தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பில் திமுக இளைஞர்கள் அணிவகுக்க ஆயத்தமாகிவிட்டனர். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan