Paristamil Navigation Paristamil advert login

மற்றவர்களின் தேர்தல் அறிக்கையை காப்பியடிக்க வேண்டிய அவசியமில்லை - எடப்பாடி பழனிசாமி

மற்றவர்களின் தேர்தல் அறிக்கையை காப்பியடிக்க வேண்டிய அவசியமில்லை - எடப்பாடி பழனிசாமி

23 தை 2026 வெள்ளி 06:32 | பார்வைகள் : 100


கறிக்கோழி பிரச்சினை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள சபாநாயகர் மறுத்ததால் அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டு, சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-  

கறிக்கோழி விவசாயிகளின் பிரச்சினை குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. பேரவை விதிகளின்படி நேரமில்லா நேரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர முடியும். நான் பேசிவிடக்கூடாது என்பதால், இல்லாத விதிகளை காரணம் காட்டி அனுமதி மறுக்கப்படுகிறது.  

கறிக்கோழி விவசாயிகள் மற்றும் அதன் தொழில் சார்ந்த 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கறிக்கோழி வளர்ப்பு, கூலி உயர்வு போன்ற கோரக்கைகளை விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். கறிக்கோழி வளர்ப்பு கூலியை ரூ.6.50 லிருந்து 20 ஆக உயர்த்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

தமிழ்நாடு அரசு சர்வாதிகார போக்கில் செயல்படுகிறது. 6 மாதமாக விவசாயிகள் போராடி வருவது தமிழக அரசுக்கு தெரியாதா? முத்தரப்பு பேச்சுவாரத்தை நடத்தப்படும் என அரசு அறிவித்துவிட்டு, பின்வாங்கியது சந்தேகத்தை எழுப்புகிறது. கறிக்கோழி வளர்ப்பு தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளை இந்த அரசு கண்டுகொள்ளாதா? அவர்கள் என்ன நிராகரிக்கப்பட்டவர்களா?  

மற்றவர்களின் தேர்தல் அறிக்கையை காப்பியடிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. கடந்த சட்டமன்ற தேர்தலின்போதே குலவிளக்கு திட்டம், மகளிருக்கு ரூ.1,500 உதவித்தொகை, மகளிருக்கு பேருந்து பயணத்தில் 50 சதவீத கட்டண சலுகை, அம்மா இல்ல திட்டம் போன்றவற்றை தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தோம். திமுக அமைச்சர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு தவறான செய்தியை பரப்பி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்