காசாவில் இஸ்ரேல் தாக்குதல் - 3 ஊடகவியலாளர்கள் உட்பட 11 பேர் பலி
22 தை 2026 வியாழன் 13:10 | பார்வைகள் : 202
காசா பகுதியில் இஸ்ரேலியப் படைகள் மேற்கொண்ட வன்முறைச் சம்பவங்களில், மூன்று ஊடகவியலாளர்கள் உட்பட குறைந்தது 11 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காசா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மூன்று மாத கால போர்நிறுத்தத்தை சீர்குலைக்கும் வகையில் புதன்கிழமை இந்த தாக்குதல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய காசாவின் நெட்சரிம் (Netzarim) பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட இடம்பெயர்ந்தோர் முகாமை படம்பிடிப்பதற்காக காரில் சென்று கொண்டிருந்த போது, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனிய ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பாலஸ்தீனிய ஊடகவியலாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொல்லப்பட்ட செய்தியாளர்கள் பொதுமக்களின் துயரங்களை ஆவணப்படுத்தும் மனிதாபிமான ஊடகப் பணியில் ஈடுபட்டிருந்தனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே நாளில் இடம்பெற்ற மற்றொரு சம்பவத்தில், இரண்டு 13 வயது சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கிழக்கு புரைஜ் (Bureij) அகதிகள் முகாமின் எல்லையில் இஸ்ரேலிய ட்ரோன் தாக்குதலில் ஒரு சிறுவன், அவனது தந்தை மற்றும் 22 வயதான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கிழக்கு நகரமான பானி சுஹைலா (Bani Suheila) பகுதியில் சமையலுக்குத் தேவையான விறகுகளைச் சேகரித்துக் கொண்டிருந்த போது, 13 வயதான மொட்செம் அல்-ஷராபி என்ற சிறுவன் இஸ்ரேலிய துருப்புக்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வைத்தியசாலையில் சிறுவனின் உடலைப் பார்த்து அவனது தந்தை கதறி அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியுள்ளன.
இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்கள் முகமது சலா காஷ்டா, அப்துல் ரவூப் ஷாத் மற்றும் அனஸ் க்னீம் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் அப்துல் ரவூப் ஷாத், ‘ஏஜென்ஸி பிரான்ஸ்-பிரஸ்’ (AFP) செய்தி நிறுவனத்திற்கு தொடர்ச்சியாக புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வழங்கி வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், எரிக்கப்பட்ட வாகனத்தின் பாகங்கள் சிதறிக் கிடந்த காணொளிகள் இணையத்தில் பரவின.
ஊடகவியலாளர்கள் பயணித்த வாகனம் எகிப்திய நிவாரணக் குழுவினுடையது என்றும், அது குறித்த தகவல்கள் முன்னரே இஸ்ரேலிய இராணுவத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்ததாகவும் அந்தக் குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.
இந்நிலையில், மத்திய காசாவில் ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய ட்ரோன் ஒன்றை இயக்கியதாக சந்தேகிக்கப்படும் நபர்களை அடையாளம் கண்டதன் பின்னரே துல்லியமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் விளக்கம் அளித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அது தெரிவித்துள்ளது. ‘எல்லைகளற்ற செய்தியாளர்கள்’ (Reporters Without Borders) அமைப்பின் தகவலின்படி, 2024 டிசம்பர் முதல் 2025 டிசம்பர் வரை காசாவில் குறைந்தது 29 பாலஸ்தீனிய ஊடகவியலாளர்கள் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர்.
2023 அக்டோபரில் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை சுமார் 220 ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே, கடந்த அக்டோபரில் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, காசாவில் மட்டும் 466 பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய தாக்குதல்களால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத் துறை புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan