ஆண்கள் Vs. பெண்கள் - காதல் தோல்வியிலிருந்து முதலில் வெளிவருவது யார்? ஆய்வு தகவல்
21 தை 2026 புதன் 17:50 | பார்வைகள் : 130
ஒருவரின் வாழ்க்கையில் உண்மையான மகிழ்ச்சியை வழங்குவது அவர்களின் காதல் வாழ்க்கைதான். ஆனால் அனைவரின் காதலும் திருமணத்தில் முடிவதில்லை. சில காதல்கள் தோல்வியிலும், பிரிவிலும் முடிவடைகின்றன. காதல் தோல்வி என்பது ஒருவருக்கு உட்சபட்ச வலியை தரக்கூடிய ஒரு நிகழ்வாகும். காதல் தோல்வி ஆண், பெண் இருவரையுமே பாதிக்கக்கூடியதாகும்.
இந்த காதல் தோல்வியிலிருந்து மீண்டு வர இருவருமே சிரமப்படுவார்கள், மேலும் அதற்கு குறிபிட்ட காலம் எடுத்துக்கொள்வார்கள். ஆனால் அது எவ்வளவு காலம் என்பது நபருக்கு நபர் மாறுபடும். காதல் முறிவு ஆண்களையும் பெண்களையும் வெவ்வேறு விதமாகப் பாதிக்கிறது என்றும், இரு பாலினத்தவரும் இந்த சூழ்நிலையிலிருந்து வெளிவர வெவ்வேறு வழிகளைக் கொண்டுள்ளனர் என்றும் அறிவியல் கூறுகிறது. காதல் முறிவு குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் ஆண், பெண் இருவரில் யார் அதிலிருந்து வெளியே வருகிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த ஆய்வின் முடிவு என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ஆய்வு என்ன சொல்கிறது?
இந்த ஆய்வு 'எவல்யூஷனரி பிஹேவியரல் சயின்சஸ்' என்ற இதழில் வெளியிடப்பட்டது. பிங்காம்டன் பல்கலைக்கழகம் மற்றும் யுனிவர்சிட்டி காலேஜ் லண்டனைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 96 நாடுகளைச் சேர்ந்த 5,705 பேரை நேர்காணல் செய்து, காதல் முறிவின்போது ஏற்படும் உணர்ச்சி மற்றும் உடல் வலியை, ஒன்றிலிருந்து பத்துக்குள் மதிப்பிடுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
காதல் முறிவு பெண்களை எப்படி பாதிக்கிறது?
இந்த ஆய்வு, காதல் முறிவால் பெண்கள் உணர்ச்சிரீதியாகவும், உடல்ரீதியாகவும் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறுகிறது. இந்த ஆய்வில் பங்கேற்ற பெண்கள் உறவு முறிந்த பிறகு, தங்கள் 'உணர்ச்சி வேதனையை' 6.84 என்று மதிப்பிட்டனர், அதே சமயம் ஆண்களுக்கு இந்த எண்ணிக்கை 6.58 ஆக இருந்தது. மேலும், பெண்கள் தங்கள் 'உடல் வலியை' சராசரியாக 4.21 என்றும், ஆண்கள் தங்களின் வலியை 3.75 என்றும் மதிப்பிட்டனர்.
ஆய்வு முடிவு என்ன?
காதல் முறிவுக்குப் பிறகு பெண்கள் உணர்ச்சி மற்றும் உடல்ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டாலும், அவர்கள் அந்த வலி நிறைந்த அனுபவத்திலிருந்து விரைவில் முழுமையாக மீண்டு, மேலும் வலிமையானவர்களாக வெளிவருகிறார்கள்.
ஆண்களின் நிலை என்ன?
பெண்கள் தங்கள் உணர்ச்சிகளை ஆக்கப்பூர்வமாகச் செலுத்தி, தங்களையும் ஒரு உறவில் தங்களின் தேவைகளையும் புரிந்துகொள்ள முனைகையில், ஆண்கள் இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள முற்றிலும் மாறுபட்ட வழியைக் கையாளுகின்றனர். ஆண்கள் 'எந்த பிரிவு உணர்ச்சியையும் அனுபவிப்பதில்லை' அல்லது மது, போதைப்பொருள் பழக்கம் அல்லது வன்முறையில் ஈடுபடலாம் என்றும், எந்தவிதமான தனிப்பட்ட சுய உணர்வுகளையும் பெறுவதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் குறைவு என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
ஆண்கள் காதல் முறிவிலிருந்து மீண்டு வர அதிக நேரமாகிறது
ஆண்கள் காதல் முறிவில் அதிக வலியை உணராவிட்டாலும் பெண்களை விட ஆண்கள் ஒரு முறிவிலிருந்து மீண்டு வர அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள் என்றும், அதற்காக அவர்கள் அதிகம் சிரமப்படுகிறார்கள் என்றும் இந்த ஆராய்ச்சி கூறுகிறது. மேலும் இந்த ஆய்வின் போது ஒரு வருடத்திற்கும் மேலாக பிரிந்திருந்த ஆண்கள் Post relationship Grief-ஆல் பாதிக்கப்பட்டிருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.
இரு பாலினத்தவரும் ஏன் வித்தியாசமாக இருக்கிறார்கள்?
பெண்களின் கவனத்திற்காகப் போட்டியிடுவதிலிருந்து பரிணாம வளர்ச்சி பெற்ற ஆண்களுக்கு, ஒரு துணையை இழப்பது ஆரம்பத்தில் 'வலியைக்' கொடுக்காமல் இருக்கலாம். இருப்பினும், தங்கள் இழப்பை உணரும்போது அவர்கள் வலியை உணரத் தொடங்குகிறார்கள். இந்த ஆய்வின் தலைவர் கூறுகையில், "ஒரு ஆண் தான் இழந்ததை ஈடுசெய்ய மீண்டும் புதிதாகப் 'போட்டியிடத்' தொடங்க வேண்டும் என்பதை உணரும்போது, அந்த இழப்பை ஆழமாகவும் மிக நீண்ட காலத்திற்கும் உணர்வார் - அல்லது அதைவிட மோசமாக, அந்த இழப்பை ஈடுசெய்யவே முடியாது என்ற உண்மையை உணரும்போது இன்னும் அதிகமாகப் பாதிக்கப்படுவார்." என்று கூறுகிறார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan