Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானில் எரிமலை அருகே சுற்றுலா பயணிகள் சென்ற ஹெலிகொப்டர் மாயம்

ஜப்பானில் எரிமலை அருகே சுற்றுலா பயணிகள் சென்ற ஹெலிகொப்டர் மாயம்

21 தை 2026 புதன் 09:13 | பார்வைகள் : 339


ஜப்பானின் கியூஷு தீவில் அமைந்துள்ள மௌண்ட் அசோ (Mount Aso) எரிமலைப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று  காணாமல் போயுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 10:52 மணியளவில் 'அசோ கடலி டொமினியன்' (Aso Cuddly Dominion) உயிரியல் பூங்காவிலிருந்து 10 நிமிடச் சுற்றுப்பயணத்திற்காக இந்த ஹெலிகொப்டர்  புறப்பட்டது. ஆனால், சிறிது நேரத்திலேயே அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

நேற்று மாலை 4 மணியளவில், மௌண்ட் அசோவின் ஐந்து சிகரங்களில் ஒன்றான நகடேக் (Nakadake) எரிமலைப் பள்ளத்தின் வடக்குப் பகுதியில் சிதைந்த நிலையில் ஹெலிகொப்டர் பாகம் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. அதன் வரிசை எண்ணை (Serial Number) வைத்து அது காணாமல் போன ஹெலிகொப்டர் தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எரிமலைப் பள்ளத்திலிருந்து வெளியேறும் நச்சு வாயுக்கள் மற்றும் அப்பகுதியில் நிலவும் அடர்த்தியான மூடுபனி காரணமாக மீட்புக் குழுவினரால் விபத்து நடந்த இடத்திற்கு உடனடியாகச் செல்ல முடியவில்லை. இன்றையதினம் காலை மீண்டும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த  ஹெலிகொப்டரில் மொத்தம் மூன்று பேர் பயணித்தனர். அதில், தாய்வான் நாட்டைச் சேர்ந்த 41 வயதுடைய ஆண்ணொருவரும்,  36 வயதுடைய  பெண்ணொருவரும், 40 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்ட 64 வயதுடைய ஜப்பானிய விமானி ஒருவரும் அடங்குவர்.

விபத்தின் போது ஒரு பயணியின் ஸ்மார்ட்போனில் உள்ள 'மோதல் கண்டறியும்' (Collision Detection) வசதி மூலம் தானாகவே அவசர அழைப்பு விடுக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்துக்குள்ளான ஹெலிகொப்டர் அமெரிக்க நிறுவனம் ஒன்றினால் தயாரிக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து இடம்பெற்ற தினத்தில்  முதல் இரண்டு பயணங்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், மூன்றாவது பயணத்தின் போதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

2024-ஆம் ஆண்டிலும் இதே நிறுவனத்தைச் சேர்ந்த ஹெலிகொப்டர் ஒன்று அவசர நிலையில் தரையிறக்கப்பட்ட போது மூன்று பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஜப்பானிய தற்காப்புப் படையினர், பொலிஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்