Paristamil Navigation Paristamil advert login

இலவச பயணம் திட்டம்; அரசு பஸ் போக்குவரத்தை முடக்கி விடும் ! தொழிற்சங்கம் அச்சம்

இலவச பயணம் திட்டம்; அரசு பஸ் போக்குவரத்தை முடக்கி விடும் ! தொழிற்சங்கம் அச்சம்

21 தை 2026 புதன் 12:37 | பார்வைகள் : 153


ஆண்களுக்கும் அரசு டவுன் பஸ்சில் இலவசம் என்ற அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதி, அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி நிலைமையை மேலும் மோசமாக்கி விடும்' என, தொழிற்சங்கங்கள் அச்சம் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில், அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் அனுமதிக்கப்படுகிறது. மகளிர் விடியல் பயண திட்டம் என்ற பெயரில், இந்த சலுகை 2021 முதல் அமலில் உள்ளது.

இதனால், அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி நிலைமை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு பண பலன்கள் வழங்கக்கூட நிதி இல்லாமல், போக்குவரத்து கழகங்கள் தடுமாறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.  


அதிர்ச்சி

இந்நிலையில், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில், 'அரசு நகர பஸ்களில் ஆண்களுக்கும் இலவச பயணம்' என வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது. இது, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தினால், அரசு போக்குவரத்து கழகங்களை இழுத்து மூடும் நிலைமை தான் ஏற்படும் என்று, அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

அதன் விபரம்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., சங்க பொதுச்செயலர் ஆறுமுகநயினார்: தமிழகத்தில் அரசு பஸ்சை ஒரு கி.மீ., இயக்க, 70 ரூபாய் செலவாகிறது. ஆனால், 30 ரூபாய் தான் வருவாய் ஈட்டுகிறது. 10,000 பஸ்கள், வருமானம் குறைந்த வழித்தடங்களில் தான் இயக்கப்படுகின்றன.

ஊக்குவிக்கும் பொது போக்குவரத்து வசதியை பாதுகாக்கவும், மேம்படுத்தவும், எந்த அரசாக இருந்தாலும், பட்ஜெட்டில் ஆண்டுதோறும் சிறப்பு நிதி ஒதுக்க கோரி போராடி வருகிறோம்; ஆனால், ஒதுக்குவதில்லை.

அ.தி.மு.க.,வின் அறிவிப்பு, பொது போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் இல்லை. தேர்தல் நேரத்தில் வெளியிடும் அறிவிப்பாக பார்க்கிறோம்.

ஆண்களுக்கும் பஸ்சில் இலவசம் என்பதை செயல்படுத்தினால், அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி நிலைமை இன்னும் மோசமாகி விடும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.ஐ.டி.யு.சி., சங்க பொதுச்செயலர் ஆறுமுகம்:

அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என, தி.மு.க., அரசு அறிவித்துள்ளது. ஆனால், இதற்கான முழு நிதியை, மாநில அரசு வழங்குவதில்லை; 70 சதவீதம் தொகையை தான், தமிழக அரசு வழங்குகிறது.  மீதமுள்ள 30 சதவீத தொகையை அரசு போக்குவரத்து கழகங்கள் தான் ஈடு செய்கின்றன.

டீசல், பஸ் பராமரிப்பு, உதிரி பொருட்கள், சுங்க கட்டணம் என, பஸ்களின் இயக்க செலவு அதிகரித்து வருகின்றன. டவுன் பஸ்களில், ஆண்களுக்கும் இலவச பயண திட்டம் செயல்படுத்தினால், அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி நிலைமை அழிவு பாதைக்கு போய்விடும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.

நிதி இழப்பு ஏற்படுமா?

பொது போக்குவரத்து வசதியை அதிகரிக்க, உலக நாடுகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். தி.மு.க., அரசு, தற்போது டவுன் பஸ்களில், பெண்களுக்கு இலவச பயண திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது, சமூக திட்டம் என கூறுவோர், இந்த திட்டத்தை விரிவுபடுத்தி, ஆண்களுக்கும் இலவசம் என அ.தி.மு.க., அறிவிப்பதை ஏற்க மறுப்பது ஏன்? இந்த திட்டத்துக்கு ஏற்படும் செலவு தொகையை, போக்குவரத்து கழகங்களுக்கு அரசு சரியாக வழங்கும்போது, எப்படி இழப்பு ஏற்படும்? ஆண் பயணியர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், அரசு போக்குவரத்து கழகங்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். கொரோனா காலத்தில் முழு அளவில் பஸ்களே ஓடாத நேரத்தில், ஊழியர்களுக்கு தடையின்றி மாத சம்பளமும், தீபாவளிக்கு போனசும் வழங்கியவர் அப்போதைய முதல்வர் பழனிசாமி. இந்த திட்டத்தையும் அவர் சிறப்பாக செயல்படுத்துவார். - கமலக்கண்ணன், செயலர், அ.தி.மு.க., தொழிற்சங்க பேரவை.

வர்த்தக‌ விளம்பரங்கள்