கரும்பு பிடி கொழுக்கட்டை
20 தை 2026 செவ்வாய் 11:14 | பார்வைகள் : 117
பொங்கல் பண்டிகை முடிந்த பின்னரும் பல வீடுகளில் கரும்புகள் மீதமாய் கிடக்கும். ஆனால் மீதமுள்ள கரும்புகளைச் சரியான முறையில் பயன்படுத்தினால், குடும்பத்திற்கே சத்தான உணவாக மாற்ற முடியும். ஆம் மீதமுள்ள கரும்பை கரும்புச் சாராக மாற்றி, அதைக் கொண்டு பிடி கொழுக்கட்டை செய்வது, பாரம்பரியமும் ஆரோக்கியமும் சேர்ந்த ஒரு சமையல் முறையை தெரிந்து கொள்வோமா...
இதற்கு தேவையான பொருட்கள் என்னவென்றால் கரும்பு துண்டுகள் மூன்று, அரிசி மாவு, நெய், உப்பு, சிறிதளவு எண்ணெய், ஏலக்காய் பொடி, தேங்காய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
முதலில் மீதமுள்ள கரும்புகளை நன்றாக கழுவி, தோலை சீவி, சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை 300 ml தண்ணீர் சேர்த்து அரைத்தோ அல்லது கரும்பு பிழியும் இயந்திரத்தில் பிழிந்தோ சாறை எடுத்துக் கொள்ள வேண்டும்.கிடைக்கும் கரும்புச் சாரை வடிகட்டி, அடுப்பில் மிதமான தீயில் வைத்து கொதிக்க விட வேண்டும். இதில் உள்ள மாசுகள் நீங்கும் வரை மேல் தோன்றும் நுரையை அகற்ற வேண்டும். சாறு சற்று கெட்டியான நிலையில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, ஆற விட வேண்டும். இவ்வாறு தயாரிக்கப்படும் கரும்புச் சாறு, இயற்கையான இனிப்பும் சத்துகளும் நிறைந்ததாக இருக்கும்.
பிறகு அரிசி மாவை சற்று வறுத்து, தேவையான அளவு உப்பு, சிறிதளவு ஏலக்காய் தூள், துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து, கரும்புச் சாரில் கலந்து கிளற வேண்டும். மாவு ஒன்றாக சேர்ந்து கெட்டியான நிலையில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி, சற்று ஆற விட வேண்டும். பின்னர் கையில் சிறிது எண்ணெய் தடவி, அந்த மாவை பிடித்து சிறிய உருண்டைகளாக அல்லது பிடி வடிவில் செய்து கொள்ள கொள்ள வேண்டும். கொழுக்கட்டை பிடிக்கும் பொழுது விரிசல்கள் ஏதும் இல்லாத வகையில் பிடிக்க வேண்டும்.
பின்னர் இட்லி பாத்திரம் அல்லது ஆவியில் வேக வைத்து எடுத்தால், கரும்புச் சாற்றின் இயற்கை இனிப்புடன் கூடிய பிடி கொழுக்கட்டை தயார். இந்த பிடி கொழுக்கட்டை சர்க்கரை சேர்க்காமல் தயாரிக்கப்படுவதால், உடலுக்கு தீங்கில்லாத இயற்கை இனிப்பாக விளங்குகிறது. கரும்பில் உள்ள இரும்புச் சத்து, தாதுக்கள் இதில் முழுமையாக கிடைப்பதால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவாக இருக்கிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan