Paristamil Navigation Paristamil advert login

பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்த தீர்மானிக்கும் ஜப்பான் பிரதமர்

பாராளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்த  தீர்மானிக்கும் ஜப்பான் பிரதமர்

19 தை 2026 திங்கள் 18:01 | பார்வைகள் : 665


ஜப்பான் பிரதமர் சனா தகாய்ச்சி, அந்நாட்டு பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பெப்ரவரி மாதம் பொதுத்தேர்தலை நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். நாட்டின் பாதுகாப்பு வியூகத்தை வலுப்படுத்தவும், பொருளாதார செலவினங்களை அதிகரிக்கவும் மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் இந்த அதிரடி தீர்மானத்தை அவர் எடுத்துள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஜன 23) ஜப்பான் பாராளுமன்றத்தின் கீழ் சபையை (Lower House) கலைக்க பிரதமர் திட்டமிட்டுள்ளார்.

இதற்கான வாக்கெடுப்பு பெப்ரவ 08 ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஒக்டோபர் மாதம் ஜப்பானின் முதல் பெண் பிரதமராகப் பதவியேற்ற சனா தகாய்ச்சி எதிர்கொள்ளும் முதல் தேர்தல் களம் இதுவாகும்.

பாராளுமன்றத்தின் கீழ் சபையில் உள்ள மொத்தம் 465 இடங்களுக்கும் இந்தத் தேர்தல் நடைபெறவுள்ளது.

தற்போது பிரதமருக்கு மக்களிடையே நிலவும் பலமான ஆதரவைப் பயன்படுத்தி, ஆளும் லிபரல் டெமோக்ரடிக் கட்சியின் (LDP) செல்வாக்கை உறுதிப்படுத்த அவர் விரும்புகிறார்.

பாதுகாப்புப் படைகளை நவீனப்படுத்தவும், பொருளாதார ஊக்கத்தொகைகளை வழங்கவும் மேலதிகமாக நிதி தேவைப்படுகிறது. இதற்கு மக்களின் நேரடி அங்கீகாரத்தைப் பெற அவர் திட்டமிட்டுள்ளார்.
ஜப்பான் மக்கள் தற்போது சந்தித்து வரும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு (Cost of Living) இந்தத் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கும். அண்மைய கருத்துக்கணிப்பில் 45 சதவீதமான  மக்கள் விலைவாசி அதிகரிப்பையே தங்களின் முதன்மையான கவலையாகக் குறிப்பிட்டுள்ளனர். பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர விவகாரங்களுக்கு 16 சதவீதம் மக்களே முக்கியத்துவம் அளித்துள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்