Paristamil Navigation Paristamil advert login

காங்கிரசை நீங்கள் ஏன் தமிழகத்தில் வளர்க்கவில்லை? ராகுல் கேள்வி!

காங்கிரசை நீங்கள் ஏன் தமிழகத்தில் வளர்க்கவில்லை? ராகுல் கேள்வி!

20 தை 2026 செவ்வாய் 06:54 | பார்வைகள் : 101


கர்நாடகா, தெலுங்கானா, கேரள மாநிலங்களை போல், தமிழகத்தில் ஏன் காங்கிரசை வளர்க்கவில்லை?' என, தமிழக காங்., நிர்வாகிகளிடம் ராகுல் கேள்வி கேட்க, அனைவரும் பதில் அளிக்க முடியாமல் திணறிய தகவல் வெளியாகி உள்ளது.

சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தமாக, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உட்பட 40 பேருடன், டில்லியில் நேற்று முன்தினம் காங்கிரஸ் தலைவர் கார்கே, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

இதுகுறித்து கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:

தி.மு.க., கூட்டணியில் நீடிக்க வேண்டும் என சிலரும், த.வெ.க., கூட்டணியில் இணைய வேண்டும் என சிலரும் கருத்து தெரிவித்துள்ளனர். த.வெ.க., கூட்டணிக்கு சென்றால், 60 தொகுதிகள், ஆறு அமைச்சர்கள் தர விருப்பம் தெரிவித்துஉள்ளனர் என, ஒரு எம்.பி., தெரிவித்துள்ளார். முன்னாள் தலைவர்கள் சிலர், ஆட்சியில் பங்கு என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்; கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்டு, கட்சியை வளர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அப்போது, ராகுல் குறுக்கிட்டு, 'கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் கட்சியை வளர்த்தது போல், தமிழகத்தில் ஏன் காங்கிரசை வளர்க்கவில்லை; எம்.பி.,க்களும், எம்.எல்.ஏ.,க்களும் என்ன செய்கிறீர்கள்; மாற்று அணி அமைக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்பட்டது' என கேட்டுள்ளார். கார்கே, 'ஆட்சியில் பங்கு கேட்பதில் எந்த தவறும் இல்லையே' என கூறியுள்ளார்.

கிராம கமிட்டியில் இரண்டு லட்சம் நிர்வாகிகள் நியமித்ததாக கூறுகிறீர்கள். ஆனால், 30,000 உறுப்பினர்களை தான் ஓட்டுச்சாவடி முகவர்களாக சேர்த்துள்ளீர்கள். மற்றவர்களை ஏன் சேர்க்க முடியவில்லை' என, பொதுச்செயலர் வேணுகோபால் கேள்வி எழுப்பி உள்ளார்.

பெண் எம்.பி., ஒருவரிடம் ராகுல், 'உங்கள் தொகுதியில் எத்தனை பூத் கமிட்டிகள் உள்ளன. பூத் ஏஜன்டுகள் எண்ணிக்கை எத்தனை' என்ற கேள்வி கேட்டதும், அந்த பெண் எம்.பி., பதில் அளிக்க முடியாமல் திணறியுள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்