Paristamil Navigation Paristamil advert login

கடன் உள்ள நிலையில் ஏன் இலவச அறிவிப்புகள்! அதிமுகவுக்கு சீமான் கேள்வி

கடன் உள்ள நிலையில் ஏன் இலவச அறிவிப்புகள்! அதிமுகவுக்கு சீமான் கேள்வி

19 தை 2026 திங்கள் 13:47 | பார்வைகள் : 105


தமிழகம் ஏற்கனவே கடனில் இருக்கும் நிலையில் எதற்காக இலவச அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்று அதிமுகவுக்கு நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி; சட்டசபை தேர்தலில் தனித்துதான் போட்டியிடுகிறோம். பிப்.21ம் தேதி நடக்க உள்ள மாநாட்டில் எல்லா வேட்பாளர்களையும் அறிவிக்கிறேன். அந்த கட்சிகளோடு (திமுக, அதிமுக) சேரவேண்டும் என்றால் நான் தனியாக கட்சி ஆரம்பிக்க வேண்டியது இல்லையே.

தனியாக நான் ஒரு கட்சியை வைத்திருக்கிறேன் என்றால் என்னுடைய கொள்கை, என் நிலைப்பாடு வேறு. என் பாதை என்பது வேறு. என் பாதை மக்களை சொர்க்கத்துக்கு அழைத்துக கொண்டு போகிறது.

ஒரு விழுக்காடு,. இரண்டு விழுக்காடு வைத்திருக்கும் சிறிய கட்சிகளே இவ்வளவு வாய்ப்புகளும், சீட்டும், நோட்டும் பேரம் பேசப்படும் போது எனக்கு பேசியிருக்க மாட்டாங்க என்று எப்படி நம்புகிறீர்கள்? நான் அதை(கூட்டணியை) விரும்பவில்லை, அந்த தவறை செய்ய மாட்டேன்.

விஜயகாந்த் கட்சி ஆரம்பிக்கும் போது 10.5 விழுக்காடு வாக்கு இருந்தது. இப்போது எவ்வளவு இருக்கும் என்று நம்புகிறீர்கள்? காரணம் கூட்டணி நிலைப்பாடுதான். தனித்துவத்தை இழக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். அது வெறும் தேர்தல் அறிக்கை தான். அதில் புதியதாக ஒன்றும் இல்லை. ஆயிரம் கொடுக்கிறோம், இப்போது கூட ஆயிரம் கொடுக்கிறோம் என்ற அறிக்கை தானே. அது அறிவிப்பு.

ஆனால் நான் கொடுப்பது தேர்தல் அறிக்கை அல்ல... ஆட்சி, நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நான் கொடுக்கிறேன். நான் இல்லாவிட்டாலும் நீங்கள் அதை படித்து ஆட்சி செய்யலாம். இலவசத்தை ஒழிப்போம், கையேந்தும் போது தன்மானத்தை இழக்கிறான். இலவச திட்டம் அல்ல... அது கவர்ச்சித்திட்டம், வீழ்ச்சித் திட்டம் என்று நான் கூறுகிறேன். இலவசத்தால் எந்த வளர்ச்சியையும் நீங்கள் காண முடியாது. இலவசத்தால் இழக்கும் பணத்தை நீ எங்கிருந்து ஈட்டுகிறாய் என்றால் பதில் உன்னிடம் இருக்காது.

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் என்ன புதுசாக இருக்கிறது. ஏற்கனவே நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது மகளிருக்கு ரூ.1000 கொடுத்தீர்கள். கூட ரூ.1000 தருகிறீர்கள், 10 லட்சம் கோடி கடன் என்பது 15 லட்சம் கோடியாகும். ஆண்களுக்கு இலவச பஸ் என்கிறீர்கள், இலவச பஸ்சை நாங்கள் கேட்டோமா? இலவசமாக பஸ்சில் பயணிக்கலாம் என்கிறீர்கள், அது பஸ்சா? அதில் நீங்களும் உங்களின் குடும்பமும் செல்வீர்களா? உங்களிடம் இலவச பஸ் வேண்டும் என்று யார் கேட்டது? இவ்வாறு சீமான் பேட்டி அளித்தார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்