Paristamil Navigation Paristamil advert login

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையில் தேக்கம்;உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையில் தேக்கம்;உச்ச நீதிமன்றத்தில் முறையீடு

16 தை 2026 வெள்ளி 11:37 | பார்வைகள் : 100


செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையில் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், பல சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறி வருகின்றனர் என, மனுதாரர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட வேலைகளுக்கு பணம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் செய்தார் என குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், அமலாக்கத்துறை சட்டவிரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, செந்தில் பாலாஜியை, கடந்த 2023, ஜூன் 14ல் கைது செய்தது.

கிட்டத்தட்ட 15 மாதங்கள், சிறை தண்டனை அனுபவித்த நிலையில், அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் அளித்தது. சிறையில் இருந்து வெளியே வந்த அடுத்தநாளே, அவர் அமைச்சராக பொறுப்பேற்றார்.

இதற்கு எதிராக சிலர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'ஜாமினில் வெளியே வந்த ஒருவர், உடனே அமைச்சராக பொறுப்பேற்றால், அவருக்கு எதிரான வழக்கு எப்படி நேர்மையாக நடக்கும்? அவருக்கு எதிராக, அச்சமின்றி யார் சாட்சி சொல்ல வருவர்?' என, கேள்வி எழுப்பியதோடு,  'செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வார் என்றால், அவருடைய ஜாமினை ரத்து செய்ய நேரிடும்' என்றும் எச்சரித்தனர். இதையடுத்து, செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், விசாரணை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒன்றாக இணைத்து விசாரிப்பதற்கு எதிராக ஒய்.பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வில்  விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர் ஒய்.பாலாஜி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முன்வைத்த வாதம்:

இந்த வழக்கில், அரசு சிறப்பு வழக்கறிஞரை மாற்ற வேண்டும்; புதிதாக ஒருவரை நியமிக்க, பெயர்களை பரிந்துரைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் மனுதாரர் என்ற முறையில், நாங்களும் சில பெயர்களை கொடுத்திருக்கிறோம்.

அதோடு, இந்த வழக்கில் காலதாமதம் செய்ய வேண்டும் என்பதற்காகவே தேவையில்லாமல் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சாட்சிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் ஒவ்வொருவரையும் விசாரித்து, பின் வழக்கு எப்போது முடியும் என்பதே தெரியவில்லை.இந்த வழக்கு விசாரணையில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. பல சாட்சிகள், பிறழ் சாட்சிகளாக மாறி வருகின்றனர். குற்றத்துக்கு உடந்தையாக இருந்தோரை, முதலில் விசாரித்து முடிக்க வேண்டும்; அப்போது தான், வழக்கில் விரைந்து ஒரு தீர்வு ஏற்படும்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

விசாரணையை வேறொரு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும்' என, அமலாக்கத்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டதை ஏற்று, விசாரணையை, பிப்ரவரி முதல் வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்