Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த எரிபொருள் நிரப்பு நிலையம் முற்றுகை

இலங்கையில் அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த எரிபொருள் நிரப்பு நிலையம் முற்றுகை

15 தை 2026 வியாழன் 17:29 | பார்வைகள் : 143


எரிபொருள் இல்லை எனக் கூறி அதிக விலைக்கு எரிபொருளை விற்பனை செய்த பேருவளை பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை முற்றுகையிட்டுள்ளது.

இரவு நேரங்களில் வாகன உரிமையாளர்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வகையில், 92 ரக பெட்ரோல் இல்லை எனக் கூறி நாட்டின் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் 'யூரோ 3' (Euro 3) ரக பெட்ரோலை விற்பனை செய்வதாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்குத் தகவல் கிடைத்திருந்தது.

அத்தகவலுக்கு அமைய செயற்பட்ட களுத்துறை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள், நேற்று (14) இரவு பேருவளை பிரதேசத்திலுள்ள பிரதான எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றை இவ்வாறு திடீர் முற்றுகைக்கு உள்ளாக்கினர்.

இதன்போது, நுகர்வோருக்கு வழங்கப்படாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 6,400 லீட்டர் 92 ரக பெட்ரோல் கையிருப்பை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அத்துடன், இரவு நேரங்களில் 92 ரக பெட்ரோல் இல்லை எனக் கூறி 'யூரோ 3' ரக பெட்ரோலை விற்பனை செய்யுமாறு சம்பந்தப்பட்ட நிறுவன அதிகாரிகளே தமக்கு அறிவுறுத்தியதாக எரிபொருள் நிரப்பு நிலையத் தரப்பினர் இதன்போது வெளிப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், தற்போது குறித்த எரிபொருள் கையிருப்பு அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களுக்கு எதிராக நாளை (15) களுத்துறை நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்