Paristamil Navigation Paristamil advert login

ஜீவாவின் காமெடி விருந்து தித்தித்ததா? திகட்டியதா?

ஜீவாவின் காமெடி விருந்து தித்தித்ததா? திகட்டியதா?

15 தை 2026 வியாழன் 14:31 | பார்வைகள் : 182


நடிகர் இளவரசு மகள் பிரார்த்தனாவுக்கு மறுநாள் காலை திருமணம். வீட்டில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில், பக்கத்து வீட்டில் வசிக்கும் தம்பி ராமையா அப்பா திடீரென காலமாகிறார். இரண்டு குடும்பத்துக்கு ஏற்கனவே பல பிரச்னைகள். நாளை காலை 10.30 மணிக்கு என் மகள் திருமணம் இங்கே நடக்கணும் என்கிறார் இளவரசு, அதே நேரத்தில் தன் அப்பாவின் இறுதி ஊர்வலம் சிறப்பாக நடந்தே ஆகணும் என்று முரண்டுபிடிக்கிறார் தம்பிராமையா.


ஒரே நேரத்தில் அடுத்தடுத்த வீடுகளில் திருமணம் மற்றும் சாவு ஊர்வலமா? என தொடங்கும் சண்டையை, அந்த ஏரியா பஞ்சாயத்து தலைவரான ஜீவா எப்படி சமாளிக்கிறார். கடைசியில் யார் ஜெயித்தார்கள் என்பது தலைவர் தம்பி தலைமையில் படக்கதை. மலையாளத்தில் 'பாலமி' என்ற ஹிட் படத்தை இயக்கிய நிதிஷ் சஹதேவ் இயக்கியிருக்கிறார்.

காமெடி கலந்த எதார்த்தமான கதை என்றாலும் அதை நட்பு, காதல், கிண்டல், சண்டை, திருப்பங்கள் என பல லேயரில் சொல்லி அசத்தி இருக்கிறார் இயக்குனர் நிதிஷ் சஹதேவ். கதையில் ஏகப்பட்ட சுவாரஸ்யமான கேரக்டர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு தினுசு. அனைவரையும் ஒருங்கிணைத்து, அவர்களை நன்கு பயன்படுத்தி ஒரு நல்ல படத்தை கொடுத்து இருக்கிறார். இந்த படத்தில் கதைதான் ஹீரோ, இயக்குனர்தான் ஹீரோ என தாராளமாக சொல்லலாம். சஞ்சோ ஜோசப், நிதிஷ் சகாதேவ் மற்றும் அனுராஜ்.ஓ.பி ஆகியோர் இணைந்து ஸ்கிரிப்ட் செய்து இருக்கிறார்கள். ஒரேநாளில் இரவில் நடக்கும் கதை என்றாலும் எங்கேயும் போராடிக்காமல் கலகலவென படம் நகர்வது இயக்குனரின் திறமை.

ஓட்டுக்காக 'கல்யாணவீடு','சாவு வீடு' என இரண்டு குடும்பத்தினரையும் சமாளிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார் ஜீவா. இரண்டு தரப்பையும் அவர் சமரசம் செய்ய கெஞ்சுவது, பலமுறை திணறுவது, பொங்குவது என கிடைத்த இடங்களில் சிக்சர் அடித்து இருக்கிறார். இத்தனைக்கும் இதில் அவருக்கு ஜோடியே கிடையாது. காதல், டூயட் இதெல்லாம் இல்லவே இல்லை. சண்டைக்காட்சிகளும் பெரிதாக இல்லை. ஹீரோயிசமும் கிடையாது. கதையை நம்பி அவர் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைத்து இருக்கிறது.

நீண்ட காலத்துக்குபின் ஜீவாவுக்கு வெற்றி படம் கிடைத்து இருக்கிறது. மணமகளின் தந்தையாக இளவரசும், செத்து போனவரின் மகனாக தம்பிராமையாவும் ஈகோ பிரச்னையால் போடும் சண்டைதான் படத்தின் முக்கியமான விஷயம். அது வொர்க் ஆகி இருக்கிறது. மணப்பெண்ணாக வரும் பிரார்த்தனா நடிப்பும், அவர் படுகிற பாடும் அருமை. மாப்பிள்ளையாக வருகிறவர், அவர் தம்பி, மாப்பிள்ளை வீட்டார் சம்பந்தப்பட்ட சீன்கள் படத்துக்கு பெரிய பிளஸ். அதிலும் காமெடி மிளிர்கிறது. அதிலும் மாப்பிள்ளையும், அவர் தம்பியும் பேசுகிற அந்த கன்னியாகுமரி ஸ்லாங் புதுசாக இருக்கிறது.

ஜீவாவும் எதிர் டீமை சேர்ந்தவராக வரும் ஜென்சன் திவாகரும் பல இடங்களில் படத்தை கலகலப்பாக்கி இருக்கின்றனர். அவரின் உடல்மொழி, வசனங்கள் அருமை. இவர்களை தவிர, மணப்பெண்ணை ஒருதலையாக காதலிக்கும் இளைஞர், அவர் செய்கிற ஆர்வக்கோளாறு விஷயங்கள், செத்து போனவரின் த ம்பியாக வருகிறவர்கள், அவரின் நண்பர்கள் அடிக்கிற லுாட்டி, மணமகள் அம்மா, தம்பிராமையா மனைவி, திருமண வீடு, சாவு வீடு, உறவினர்கள் என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்து இருப்பதும், அவர்களின் செயல்பாடுகளும் படத்தை நிறைவாக்கி இருக்கிறது. ஹீரோ, ஹீரோயின், வில்லன் என தனிப்பட்டமுறையில் யாரும் இல்லை. சூழ்நிலைக்கு தக்கப்படி ஒவ்வொரு கேரக்டரும் ஸ்கோர் செய்வது படத்தின் ஸ்பெஷல்.

பெரும்பாலும் ஒரே இடத்திலேயே அதிக காட்சிகள் நடக்கிறது. அதைஅழகாக காண்பித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர். கடைசியில் வரும் அந்த தண்ணீர் தொட்டி சீனை சிறப்பாக எடுத்து இருக்கிறார். இசை ஓகே ரகம். தேவையில்லாத சீன்கள், பில்டப் காட்சிகள், ஹீரோயிச சீன்கள் இல்லாதது படத்தையும் இன்னும் பிரஷ் ஆக்கி இருக்கிறது. அனைத்து பிரச்னைகளும் முடிந்தபின் ஹீரோ ஜீவா வீட்டுக்கு போவதும், அங்கே நடக்கும் சில விஷயங்களும், கவுரவ வேடத்தில் வருகிற அந்த நடிகையின் முகமும் மனதில் நிற்கிறது. எப்படி பிரச்னை முடியப்போகிறது என்று நினைக்கும் நேரத்தில் சண்டை பெரிதாகிறது, அதையடுத்து ஒரு சம்பவம் நடப்பதும், அதற்குபின் இரண்டு வீட்டாரும் தவிப்பதும், ஜீவா பேசுகிற டயலாக்கும் செம. சுந்தர். சி படம், சித்திக் படம் மாதிரி காமெடியும், கதையும் இணைந்து இருப்பது படத்தை அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைத்துள்ளது. ஒரு நாளில் நடக்கும் கதை என்றாலும், பல ஆண்டுகள் மனதில் நிற்பது மாதிரி கலாட்டா காமெடியாக, பொங்கல் விருந்தாக படம் அமைகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்