Paristamil Navigation Paristamil advert login

பரிஸில் தூக்க மயக்கத்தில் VTC ஓட்டுநர் மோதி இளைஞர் உயிரிழப்பு!!

பரிஸில் தூக்க மயக்கத்தில் VTC ஓட்டுநர்  மோதி இளைஞர் உயிரிழப்பு!!

14 தை 2026 புதன் 21:05 | பார்வைகள் : 956


பரிஸ் 15வது வட்டாரத்தில் (XVe arrondissement) ஜனவரி 9 rue de Vaugirard-இல் நடந்த கொடூர விபத்தில் 33 வயது இளைஞர் றோமான் (Romain) உயிரிழந்துள்ளார். தனது வீட்டிலிருந்து வெறும் 100 மீட்டர் தொலைவில் நடந்து சென்று கொண்டிருந்த போது, Uber போன்ற VTC சேவையின் கறுப்பு மெர்சிடிஸ் வேன் அவரை மோதியது.

ஓட்டுநர் தூக்கத்தில் ஆழ்ந்ததால் வாகனம் கட்டுப்பாடு இழந்து நடைபாதையில் ஏறி, றோமானை மோதிய பின்னர் அருகிலுள்ள "Les Volontaires" பார் முன்பு மோதி நின்றது ; இச்சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

44 வயது பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டுநர் (இத்தாலிய உரிமம் கொண்டவர்) அதிக நேரம் வாகனம் ஓட்டியதால் களைப்படைந்து தூங்கியிருக்கலாம் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் VTC-யில் பயணித்த இரு பின்லாந்து நாட்டு பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

றோமான் தலையில் பலத்த காயம், எலும்பு முறிவுகளுடன் பித்தி-சால்பெட்ரியர் (Pitié-Salpêtrière) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஜனவரி 13 அன்று உயிரிழந்தார் ; STJA பிரிவு காவல் துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

வீட்டிற்கு அருகிலேயே இத்தகைய துயரச் சம்பவம் நிகழ்ந்தது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. VTC ஓட்டுநர்களுக்கு போதிய ஓய்வு நேரம் கட்டாயமாக்கப்பட வேண்டும் என பொதுமக்களும் உறவினர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்