Paristamil Navigation Paristamil advert login

மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை ! தர்மேந்திர பிரதான்

மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை ! தர்மேந்திர பிரதான்

15 தை 2026 வியாழன் 08:16 | பார்வைகள் : 107


நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதுபோல், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த, வரும் காலங்களில் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும், என, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

சென்னை ஐ.ஐ.டி.,யில், பொங்கல் விழா நடந்தது.  இதில், தர்மேந்திர பிரதான் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, போட்டிகளில் வெற்றி பெற்ற, மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பேசியதாவது:

பொங்கல் விழா, பல மாநிலங்களில், பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. தென் மாநிலங்களில், பொங்கல் விழாவாக கொண்டாடப்படுகிறது. இது குறித்து நிறைய படித்துள்ளேன். எனக்கு விருப்பமான உணவு பொங்கல்.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

இந்தியா தலைமைத்துவ நிலைக்கு வளர்ந்துள்ளது. அனைத்து துறைகளிலும், டிஜிட்டல் பரிவர்த்தனை உள்கட்டமைப்பு மேம்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு எனும் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை, கல்வி, மருத்துவம், விவசாயம், போக்குவரத்து, உற்பத்தி என, அனைத்து துறையிலும் செயல்படுத்தி வருகிறோம்.

சென்னை, ஐ.ஐ.டி., பொறுப்பில், ஏ.ஐ., தொழில்நுட்பம் கல்வித்துறையில் செயல்படுத்தப்படுகிறது. இதில் மாணவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது.

ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன் போதிப்பது, ஆராய்ச்சி மாணவர்கள் சமர்ப்பிக்கும் கட்டுரைகளின் தரத்தை மேம்படுத்துவது; பள்ளி முதல் ஆராய்ச்சி வரை அவரவர் தாய் மொழியில் கற்க நடவடிக்கை எடுப்பது என, கல்வித்துறையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதுபோல், மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த, வரும் காலங்களில் கல்வித்துறைக்கு அதி முக்கியத்துவம் தரப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன் பொங்கலிட்டு வழிபட்டார்.

விழாவில், ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி, மத்திய உயர் கல்வித்துறை செயலர் வினீத்ஜோஷி, ஐ.ஐ.டி., பதிவாளர் ஜேன் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

🔥 இன்றைய சிறப்பு சலுகை

வர்த்தக‌ விளம்பரங்கள்