Paristamil Navigation Paristamil advert login

என்.டி.ஏ. உடன் கூட்டணியா?- அ.ம.மு.க. விளக்கம்

என்.டி.ஏ. உடன் கூட்டணியா?- அ.ம.மு.க. விளக்கம்

14 தை 2026 புதன் 08:54 | பார்வைகள் : 202


அ.ம.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கடந்த 5-ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில், கூட்டணி விவகாரத்தில் தமிழகத்தின் நலன் மற்றும் கழகத்தின் நலனை மையமாகக் கொண்டே கூட்டணி அறிவிக்கப்படும் என்பதை கழகப் பொதுச்செயலாளர் தெள்ளத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அந்தச் செய்தி அனைத்து ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் ஒளிபரப்பப்பட்டது.

இந்தச் சூழலில் சில ஊடகங்கள், கூட்டணி விவகாரத்தில் தயக்கம், குழப்பம், அழுத்தம் என பொய்ப் பிரச்சாரம் செய்து வருவதோடு, கடந்த சில தினங்களாக கழக நிகழ்ச்சிகளில் பொதுச்செயலாளர் கலந்து கொள்ளவில்லை எனவும் தவறான தகவலைப் பரப்பி வருகின்றனர்.

கழக பொதுக்குழு நிகழ்ச்சிக்குப் பின்பாக, சொந்த வேலைகள் காரணமாகவும், பொங்கல் பண்டிகை நாட்கள் வருவதாலும் எந்த நிகழ்ச்சிகளுக்கும் திட்டமிடப்படவில்லை. அதே நேரத்தில், கூட்டணி தொடர்பாக கழகப் பொதுச்செயலாளருக்கு எந்தவொரு தயக்கமும், குழப்பமும், அழுத்தமும் இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, உரிய நேரத்தில் கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டினை அறிவிப்பார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

வருகின்ற 17-ம் தேதி எம்.ஜி.ஆரின் 109-வது பிறந்தநாள் விழா அன்று சென்னை, அண்ணாசாலையில் அமைந்துள்ள புரட்சித்தலைவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்ற நிகழ்ச்சியில் பங்கேற்று கழக நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்திக்கவுள்ளார் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இவ்வாறு அமமுக தலைமைக் கழகம் செய்து வெளியிட்டுள்ளது.

அதிமுக- பாஜக கூட்டணியில் அமமுக இணைவதாக செய்திகள் வெளியான நிலையில், அமமுக இவ்வாறு விளக்கம் கொடுத்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்