Paristamil Navigation Paristamil advert login

பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.3,000! வழங்க முடிவு...

பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.3,000! வழங்க முடிவு...

10 மார்கழி 2025 புதன் 06:15 | பார்வைகள் : 106


அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், வரும் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா 3,000 ரூபாய் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. மேலும், 2.25 கோடி குடும்பங்களுக்கு தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்பட உள்ளது.

வாக்காளர்களை குஷிப்படுத்தும் வகையில், இம்முறை பொங்கல் பரிசு தொகுப்பு இருக்கும் என, தலைமை செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது. தமிழக ரேஷன் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அ.தி.மு.க., ஆட்சியில், 2021 பொங்கலுக்கு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா 2,500 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

இலக்கு அதுவே, இதுவரை அரசால் வழங்கப்பட்ட உச்சபட்ச பொங்கல் பரிசு தொகையாக உள்ளது. பின், தி.மு.க., ஆட்சியில், 1,000 ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு பொங்கலுக்கு பணம் இல்லாமல், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மட்டுமே வழங்கப்பட்டது.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதில், 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க, தி.மு.க., இலக்கு நிர்ணயித்துள்ளது.

இதனால், வரும் 2026 பொங்கலுக்கு, கார்டுதாரர்களுக்கு தலா 5,000 ரூபாய் பணத்துடன் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை, நிதித்துறை அதிகாரிகளிடம் மூத்த அமைச்சர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால், அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால், பொங்கல் தொகுப்பில் பணம் வழங்க இத்துறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.


அதேசமயம், தேர்தலை முன்னிட்டு, இதுவரை இல்லாத அளவாக ரொக்கப் பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு இருக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு ஆட்சியாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையடுத்து, பொங்கல் பரிசு தொகுப்பில், ஒருவருக்கு அதிகபட்சமாக எவ்வளவு தொகை வழங்கலாம்; அதற்கு எவ்வளவு செலவாகும்; அந்தச் செலவை எப்படி ஈடுகட்டுவது என்பது தொடர்பாக சில தினங்களுக்கு முன், சென்னை தலைமை செயலகத்தில் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

அதன் அடிப்படையில், 2.25 கோடி கார்டுதாரர்களுக்கு தலா 3,000 ரூபாய் ரொக்கப்பணம், தலா 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

விரைவில் அறிவிப்பு இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பொங்கல் பண்டிகை முடிவடைந்த பின், ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதில்லை. ஆனால், வரும் பொங்கலுக்கு ரொக்கப்பணம் வழங்கப்படுவதால், பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க ஜனவரி மாதம் முழுதும் அவகாசம் அளிக்கப்படும்.

பொங்கல் பரிசு தொகுப்பில் இடம்பெற வேண்டிய பொருட்கள் தொடர்பாக, அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு விட்டது. என்னென்ன இடம்பெறும் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். இவ்வாறு அவர் கூறினார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்