செந்தில் பாலாஜி நேரில் ஆஜராக தளர்வு; ஜாமின் கட்டுப்பாடுகளை நீக்கியது சுப்ரீம் கோர்ட்
9 மார்கழி 2025 செவ்வாய் 06:00 | பார்வைகள் : 132
தி.மு.க., முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 'இதனால், வாரம் இருமுறை ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அவர் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க., ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி, பலரிடமும் பணம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மூன்று மோசடி வழக்குகளை பதிவு செய்தனர்.
இந்த பிரதான வழக்குகளின் அடிப்படையில், செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக கூறி ஈ.டி., எனப்படும் அமலாக்கத் துறை தனியே வழக்குப் பதிவு செய்து கைது செய்தது; பின், நிபந்தனைகளுடன் கூடிய ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், வாரம்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ஈ.டி., அலுவலகம் முன் ஆஜராக வேண்டும் என்ற ஜாமின் நிபந்தனையை தளர்த்த கோரியும், உத்தரவில் இடம்பெற்ற தனக்கு எதிரான கடுமையான கருத்துகளை நீக்கக் கோரியும் செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்:
கடந்த ஒன்றரை ஆண்டு களாக வாரம்தோறும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகியும், வழக்கில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை என கூறுவதை ஏற்க முடியவில்லை.
வாரம் இருமுறை அவரை அழைக்க என்ன காரணம். அவர் இருமுறை நேரில் வருகிறார். தேநீர் அருந்துகிறார். பின்னர் சென்று விடுகிறார்.
இது செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல; அவருக்காக வாரம்தோறும் இரு நாட்கள் காத்திருக்கும் ஈ.டி., அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனையாகவே நாங்கள் கருதுகிறோம். வரும் வாரம் செந்தில் பாலாஜி இந்த வழக்குக்காக உங்கள் அலுவலகத்திற்கு வந்தால், அவரிடம் என்ன விசாரணை நடத்துவீர்கள் என சொல்லுங்கள்? இவ்வாறு கேள்வி எழுப்பினர்.
ஈ.டி., சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜோஹெப் ஹுசைன், ''செந்தில் பாலாஜி அதிகாரம் மிக்க நபர். அவர் சாட்சியங்களை கலைத்துவிட நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்காகவே அவரது ஜாமினில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன,'' என்றார்.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில் மற்றும் வழக்கறிஞர் ராம் சங்கர் இருவரும், இந்த கூற்றை வலுவாக மறுத்தனர்.
செந்தில் பாலாஜியை விசாரணைக்காக நேரில் ஆஜராக சொன்னால், அவர் மறுப்பு தெரிவிக்காமல் ஆஜராவார். எனவே, இந்த நிபந்தனைக்கு தற்போது அவசியமே இல்லை' என வாதிட்டனர்.
பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றால் மட்டுமே, அவரை நேரில் அழைக்க வேண்டும். இதற்கான நோட்டீஸை ஈ.டி., முன்கூட்டியே அவருக்கு வழங்க வேண்டும். நேரில் ஆஜராவதில் இருந்து அவருக்கு ஏதேனும் நிவாரணம் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை நாடலாம். அதே போல் செந்தில் பாலாஜி விசாரணைக்கு இடையூறாக இருந்தால், அமலாக்கத் துறையும் நீதிமன்றத்தை அணுகலாம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என கேட்ட மற்ற வழக்குகளை, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரன் மகேஸ்வரி
பிரான்ஸ், யாழ் புங்குடுதீவு
வயது : 69
இறப்பு : 29 Nov 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan