Paristamil Navigation Paristamil advert login

இலங்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட நிவாரணங்கள் அறிவிப்பு

இலங்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விசேட நிவாரணங்கள் அறிவிப்பு

5 மார்கழி 2025 வெள்ளி 16:57 | பார்வைகள் : 134


இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.

இதன்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்திற்கொண்டு, எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய மூன்று மாதங்களுக்கு விசேட மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

அதன்படி, இரண்டுக்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு 50,000 ரூபாவும் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் மாத்திரம் உள்ள குடும்பத்திற்கு 25,000 ரூபாவும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதேபோல், வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள், சேதமடைந்த தமது வீட்டு உபகரணங்களை மீண்டும் கொள்வனவு செய்வதற்காக ரூபா 50,000 வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

தற்போது நலன்புரி முகாம்களில் தங்கியுள்ள மக்கள் தொடர்ந்தும் அங்கேயே தங்கியிருக்க விரும்பினால், அவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளும் அரசாங்கத்தினால் செய்து கொடுக்கப்படும் எனவும், மாறாக, முகாம்களிலிருந்து வெளியேறி வாடகை வீடுகளில் வசிக்க விரும்புவோருக்கு, 6 மாத காலத்திற்கு மாதாந்தம் 25,000 ரூபாய் வாடகைக் கொடுப்பனவாக வழங்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், அனர்த்தத்தினால் நெல், சோளம் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு, ஒரு ஹெக்டேர் நிலப்பரப்பிற்கு 150,000 ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்