Paristamil Navigation Paristamil advert login

வடசென்னை பகுதிகள் தத்தளிப்பு! புழல் ஏரி நீர் திறப்பால் தனித்தீவானது

வடசென்னை பகுதிகள் தத்தளிப்பு! புழல் ஏரி நீர் திறப்பால் தனித்தீவானது

4 மார்கழி 2025 வியாழன் 09:54 | பார்வைகள் : 100


தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் புழல் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி, உபரிநீர் திறப்பு அதிகரித்துள்ளது. வடிகால்வாய் ஆக்கிரமிப்பு உள்ளிட்டவற்றால் தண்ணீர் வெளியேற வழியின்றி, செங்குன்றம், மாதவரம், கொடுங்கையூர் உள்ளிட்ட வடசென்னை பகுதிகள் தத்தளிக்கின்றன.

டிட்வா' புயலால், கடந்த மூன்று நாட்களாக சென்னையில் மழை பெய்து, பிரதான சாலைகள், குடியிருப்புகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. பாதிப்பு பகுதிகளில் ராட்சத மோட்டார் வைத்து, தண்ணீரை வெளியேற்றும் பணிகளை சென்னை மாநகராட்சி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

இரவு, பகலாக மாநகராட்சி ஊழியர்கள், துாய்மை பணியாளர்கள், போலீசார் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். ஆனால், சென்னை புறநகர் பகுதிகளில் தண்ணீர் வடியாததால், குடியிருப்பு மக்களின் தவிப்பு மூன்றாவது நாளாக தொடர்கிறது.

2,500 கனஅடி நீர்


புறநகர் பகுதியான புழல் ஒன்றியம் தீர்த்தகிரையம்பட்டு, விளாங்காடுபாக்கம், செங்குன்றம், குமரன் நகர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகள், வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையால், சோழவரம், பாடியநல்லுார் உள்ளிட்ட ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீர், புழல் ஒன்றியம் தீர்த்தகிரையம்பட்டு உள்ளிட்ட பகுதிகளை சூழ்ந்துள்ளது.

அதேபோல், சென்னையின் முக்கிய ஏரியான புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 21 அடியில் 20 அடி வரை தண்ணீர் நிரம்பியுள்ளது. அதன் நீர்வரத்து அதிகரித்து வருவதால், நேற்று மாலை 2,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நீர் செல்லும் வடிகால்வாயில் ஆக்கிரமிப்பு அதிகமாக இருப்பதால், தண்ணீர் செல்ல வழியின்றி, மாதவரம், வடப்பெரும்பாக்கம், விளாங்காட்டுபாக்கம், மஞ்சம்பாக்கம், வடகரை உள்ளிட்ட பகுதிகளை மூழ்கடித்து, தனித்தீவாக மாற்றியுள்ளது.

தவிர, கொரட்டூர் ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இந்த நீர், கொளத்துார் தணிகாசலம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ளது.
மக்கள் தவிப்பு:


வியாசர்பாடி, கொடுங்கையூர், எம்.கே.பி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் கேப்டன் கால்வாய் வழியாக பகிங்ஹாம் கால்வாயில் கலக்கும். தொடர் மழையால் கேப்டன் கால்வாய் முழுதும் மழைநீர் பெருக்கெடுத்து, எம்.கே.பி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது.

திருவொற்றியூர் மண்டலம் ஏழாவது வார்டில் ராஜாஜி நகர், கோடம்பாக்கம், அரும்பாக்கம், சூளைமேடு, வில்லிவாக்கம் சிட்கோ நகர், பாலவாக்கம் ஆகிய பகுதிகளிலும் ஏராளமான தெருக்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

குறிப்பாக, ஆவடி மாநகராட்சியில், திருமுல்லைவாயில் மற்றும் காந்தி நகர் ராமானுஜம் தெருவில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளம் வெளியேற வழியின்றி, குடியிருப்பு பகுதியைச் சுற்றி 2 அடிக்கு மேல் தேங்கி நிற்கிறது.

இதனால், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். பால், பிஸ்கெட், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகள்கூட கிடைக்காமல், பெரும் இன்னல்களை சந்தித்துள்ளனர். அப்பகுதிமக்கள் படகுகள் மற்றும் டிராக்டர்கள் வாயிலாக மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மின்சாரம் துண்டிப்பு:


மணலி விரைவு சாலை - திருவொற்றியூர் நெடுஞ்சாலை, மாதவரம் உள்ளிட்ட சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. சில இடங்களில் இரு நாட்களாக மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதி தெருக்கள் மற்றும் சாலைகளில் கழிவுநீருடன் மழைநீரும் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் பால், குடிநீர், மளிகை பொருட்கள் என அத்தியாவசிய தேவை மற்றும் மருத்துவ அவசரத்துக்கு கூட வெளியே செல்ல முடியவில்லை. யாரும் வந்து எந்த உதவியையும் செய்யவில்லை என, இப்பகுதியினர் தெரிவித்தனர்.

ஆங்காங்கே தேங்கிய வெள்ளநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுத்தாலும், தொடர்ந்து மழை, ஏரிகள் நிரம்பி வழியும் நீர்வரத்து உள்ளிட்டவற்றால், வெள்ளத்தை அகற்ற முடியாமல், மாநகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகங்கள் தவித்து வருகின்றன.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்