Paristamil Navigation Paristamil advert login

விஜய்க்கு மறுப்பு: ரங்கசாமி பின்வாங்கியது ஏன்?

விஜய்க்கு மறுப்பு: ரங்கசாமி பின்வாங்கியது ஏன்?

4 மார்கழி 2025 வியாழன் 07:52 | பார்வைகள் : 100


நடிகர் விஜய்க்கு தமிழகத்தில் ரோடு ஷோ நடத்த, அரசு தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. கரூர் உயிரிழப்பு சம்பவத்துக்கு பின், வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வகுத்துள்ள நிலையில், அனைத்து கட்சியினருக்கும், ரோடு ஷோவுக்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுக்கப்படுகிறது.

இந்நிலையில் நாளை, எப்படியாவது புதுச்சேரியில் விஜயின் ரோடு ஷோ நடத்த வேண்டும் என, தமிழக வெற்றிக் கழகத்தின் முன்னணி தலைவர்கள் ஆசைப்பட்டனர். இதற்காக, புதுச்சேரி அரசிடம் அனுமதி கோரி விண்ணப்பித்தனர். முதலில், அனுமதி அளிப்பதாக கூறிய புதுச்சேரி போலீஸ் அதிகாரிகள், அதன் பிறகு ஆலோசனை மேல் ஆலோசனைகள் நடத்தி, ரோடு ஷோவுக்கு அனுமதி தர மறுத்து விட்டனர்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையில் அதிகாரிகளும், போலீஸ் உயரதிகாரிகளும் பங்கேற்ற கூட்டம் கடந்த 2ம் தேதி நடந்தது. கூட்டத்துக்கு பின், 'கரூரைப் போன்ற சம்பவம் புதுச்சேரியிலும் நடக்கலாம்; அதனால், அனுமதி மறுத்து விடலாம்' என முடிவெடுத்தனர்.

அந்த கூட்டத்தில் பங்கேற்ற த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் , தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் அனுமதி கேட்டு எவ்வளவோ போராடினர். ஆனால், போலீஸ் ஐ.ஜி., அஜித்குமார் சிங்ளா, 'சீரியஸான இந்த விஷயத்தை, த.வெ.க., எளிதாக எடுத்துக் கொள்ள முயல்கிறது' என, தன் அதிருப்தியை ஆதவ் மற்றும் ஆனந்திடம் வெளிப்படுத்தி உள்ளார்.

இதையடுத்து, விஜய் ரோடு ஷோ நடத்த, புதுச்சேரி அரசு மறுத்து விட்டது. இதற்கிடையில், புதுச்சேரி அரசின் முடிவுக்கு பின்னணியில், அரசியல் காய் நகர்த்தல் இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்து, புதுச்சேரி த.வெ.க., நிர்வாகிகள் கூறியதாவது:

விஜயுடன் கைகோர்த்து, வரும் புதுச்சேரி சட்டசபை தேர்தலை சந்திக்கும் திட்டத்தில், என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், புதுச்சேரி முதல்வருமான ரங்கசாமி இருந்தார். இதற்காக, ரகசிய பேச்சு நடத்தப்பட்டன.

ஏற்கனவே, பா.ஜ., கூட்டணியில் என்.ஆர்.காங்கிரசோடு, புதுச்சேரி பா.ஜ.,வினருக்கு மோதல் இருக்கிறது. இரு கட்சிகளூம் இணைந்து புதுச்சேரியில் கூட்டணி ஆட்சி நடத்தினாலும், கூட்டணியில் மரியாதை இல்லை என புலம்பி வருகிறார் ரங்கசாமி.

அதனால், சட்டசபை தேர்தலுக்கு த.வெ.க., வோடு கூட்டணி அமைக்க ரங்கசாமி முயன்றார். இதற்கிடையே, விஜயை தங்கள் பக்கம் அழைத்துச் செல்ல, புதுச்சேரி காங்கிரசார் முயற்சி எடுப்பதும், அதற்கு விஜய் தரப்பில் ஆதரவான வார்த்தைகள் வெளிப்பட்டதும் ரங்கசாமிக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.

அதே நேரத்தில், என்.ஆர்.காங்கிரசுக்கு பா.ஜ., தரப்பில் இருந்தும் சில எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதால், த.வெ.க., பக்கம் செல்லும் முடிவை சட்டென ரங்கசாமி மாற்றிக் கொண்டுள்ளார். அதனாலேயே, புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோவுக்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இருந்தாலும், விஜயுடனான உறவை நிரந்தரமாக முறித்துக் கொள்ள ரங்கசாமி விரும்பவில்லை. அடுத்தடுத்து நடக்கும் அரசியல் நிகழ்வுகள், த.வெ.க., - என்.ஆர்.காங்.,க்கு இடையேயான கூட்டணியை முடிவு செய்யும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்