இஸ்ரேல் பிரதமரின் ஊழல் வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கோரிக்கை
2 மார்கழி 2025 செவ்வாய் 07:36 | பார்வைகள் : 100
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனக்கு எதிராக நடந்து வரும் ஊழல் வழக்குகளில் இருந்து விடுவிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இலஞ்சம், மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் தனித்தனி வழக்குகளை சந்தித்து வருகிறார்.
இஸ்ரேல் வரலாற்றில் பதவியில் இருக்கும்போது வழக்கு விசாரணையை எதிர்கொள்ளும் ஒரே பிரதமர் நெதன்யாகு ஆவார்.
அவர் இன்னும் எந்த வழக்கிலும் குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை.
மேலும், தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார். இந்த வழக்குகள் நாட்டை பிளவு படுத்துவதாகவும், விசாரணையை உடனடியாக முடிப்பது தேசிய நல்லிணக்கத்தை மீட்டெடுக்க உதவும் என்றும் நெதன்யாகு கூறியிருந்தார்.
மேலும், வாரத்துக்கு மூன்று முறை நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டியிருப்பதால், தன் பணிகள் பாதிக்கப்படுவதாகவும் கூறியிருந்தார். இதன் காரணமாக, தனக்கு எதிராக நடந்து வரும் ஊழல் வழக்குகளில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கேட்டு, அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகத்தில் பொது மன்னிப்பு கோரிக்கை, பிரதமர் அலுவலகம் சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, சட்ட மற்றும் நீதித்துறை கருத்துக்களை பெற்ற பின், பொறுப்புடனும், நேர்மையுடனும் இக்கோரிக்கையை பரிசீலிப்பதாக ஜனாதிபதி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சில வாரங்களுக்கு முன் இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக்குக்கு எழுதிய கடிதத்தில், நெதன்யாகுவுக்கு உடனடியாக மன்னிப்பு வழங்குமாறு கேட்டுக்கொண்டிருந்த நிலையில், நெதன்யாகு மன்னிப்பு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது. பொதுவாக இஸ்ரேலில் தண்டனை வழங்கப்பட்ட பின்னரே மன்னிப்பு வழங்கப்படுவது வழக்கம்.
இருப்பினும், குற்றம் நிரூபிப்பதற்கு முன்பே மன்னிப்பு வழங்குவது அரிதான மற்றும் விதிவிலக்கான நடவடிக்கையாகும் என்றும், இது நீதித்துறையின் சுதந்திரத்தில் தலையிடுவதாகும் என்றும் எதிர்க்கட்சியினர் மற்றும் சட்ட வல்லுநர்கள் விமர்சித்துள்ளனர்.
மேலும், குற்றத்தை ஒப்புக்கொள்ளாமலும், வருத்தம் தெரிவிக்காமலும் மன்னிப்பு கோருவது சட்ட விரோதமானது என எதிர்க்கட்சி தலைவர்கள் வாதிடுகின்றனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan