Paristamil Navigation Paristamil advert login

ஒரு அமர்வு அளிக்கும் உத்தரவை மற்றொரு அமர்வு மாற்றுகிறது உச்ச நீதிமன்றம் வேதனை

ஒரு அமர்வு அளிக்கும் உத்தரவை மற்றொரு அமர்வு மாற்றுகிறது உச்ச நீதிமன்றம் வேதனை

28 கார்த்திகை 2025 வெள்ளி 11:21 | பார்வைகள் : 100


ஒரு அமர்வு அளிக்கும் தீர்ப்பை, மற்றொரு அமர்வு மாற்றி எழுதும் போக்கு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது' என, உச்ச நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

மாநில அரசுகள் அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க, கவர்னர்களுக்கு காலக்கெடு விதித்து உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்திருந்தது.

கவர்னர்களுக்கு அவ்வாறு காலக்கெடு விதிப்பது பொருத்தமற்றது என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு சமீபத்தில் விளக்கம் அளித்தது.

இந்நிலையில், தீர்ப்புகளை மாற்றி எழுதும் போக்கு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபாங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மாஷி அடங்கிய அமர்வு வேதனை தெரிவித்துள்ளது.

கொலை குற்றச்சாட்டுக்கு ஆளான நபர் ஒருவர், தன் ஜாமின் நிபந்தனைகளில் மாற்றம் செய்யக்கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த போது, நீதிபதிகள் இதை தெரிவித்தனர். இது குறித்து நீதிபதிகள் மேலும் கூறியதாவது:

உச்ச நீதிமன்றத்தில் ஒரு அமர்வு வழக்கை விசாரித்து தீர்ப்பளித்தால், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் படுகிறது.

அதே வழக்கை வேறு ஒரு அமர்வு விசாரித்து, ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை மாற்றி எழுதுகிறது. இந்த போக்கு அதிகரித்து வருவது வேதனை அளிக்கிறது.

தீர்ப்பு வழங்கிய நீதிபதி பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், அந்த தீர்ப்பு அளிக்கப்பட்ட காலத்துக்கும், மேல்முறையீடு செய்த காலத்துக்கும் இடையே உள்ள இடைவெளியை கருத்தில் கொள்ளாமல் தீர்ப்புகள் மாற்றி எழுதப்படுகின்றன.

ஏற்கனவே அளிக்கப்பட்ட தீர்ப்பால் அதிருப்தி அடைந்தவர்களின் கோரிக்கையை ஏற்று, வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வோ அல்லது சிறப்பு அமர்வோ அமைக்கப்படுகின்றன. அப்போது தீர்ப்புகள் மாற்றி எழுதப் படுகின்றன.

குறிப்பிட்ட சட்டப் பிரச்னையில் ஒரு அமர்வு அளிக்கும் தீர்ப்பு, சச்சரவுக்கு முடிவு காண்பதாக இருக்கும். அந்த தீர்ப்பை அனைத்து நீதிமன்றங்களும் பின்பற்ற வேண்டும். இது தான் அரசியல் சாசன சட்டப்பிரிவு 141ன் நோக்கம்.

ஆனால், ஒரு தீர்ப்பு வழங்கப்பட்ட பின், அது தொடர்பான வழக்கை வேறு கண்ணோட்டத்தில் சீராய்வு செய்ய அனுமதித்தால், அது அரசியல் சாசன சட்டப்பிரிவு 141ன் நோக்கத்தை தோல்வியடைய செய்து விடுகிறது. மேலும், தீர்ப்புகள் மீதான மதிப்பையும் வலுவிழக்க செய்து விடுகிறது.

முதலில் அளித்த தீர்ப்பை மறு விசாரணையின் போது மாற்றுவதன் மூலம், நீதி பரிபாலனம் சரியாக நிலைநாட்டப்பட்டு விட்டதாக அர்த்தமாகாது.

இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்