வங்கக்கடலில் உருவானது தித்வா புயல் நாளை மறுநாள் சென்னையை நெருங்குகிறது
28 கார்த்திகை 2025 வெள்ளி 09:21 | பார்வைகள் : 100
வங்கக்கடலில் இலங்கை அருகே நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை, 'தித்வா' புயலாக வலுவடைந்தது. இது, நாளை மறுநாள் சென்னையை நெருங்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பி.அமுதா கூறியதாவது:
தென்மேற்கு வங்கக்கடலில், தெற்கு இலங்கை அருகே நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது, நேற்று காலை, 'தித்வா' புயலாக வலுவடைந்தது. 'தித்வா' என்றால் நீர்பரப்பு என பொருள் கூறப்படுகிறது. ஏமன் நாட்டின் பரிந்துரை அடிப்படையில் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது.
நேற்று மதியம் நிலவரப்படி, சென்னையில் இருந்து 700 கி.மீ., தொலைவில், புதுச்சேரியில் இருந்து 610 கி.மீ., தொலைவில் தித்வா புயல் மையம் கொண்டிருந்தது. மணிக்கு 15 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வந்த இந்த புயல், நேற்று பிற்பகல் முதல் மெதுவாக நகரத் துவங்கியுள்ளது.
இந்த புயல் வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நிலையில், நாளை மறுதினம் சென்னை, புதுச்சேரி கடலோர பகுதிகளை நெருங்க வாய்ப்புள்ளது. இதன் தாக்கம் எந்த அளவுக்கு இருக்கும் என்பது, அடுத்தடுத்த நகர்வுகள் அடிப்படையில் தெரிய வரும்.
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள், வட மாவட்டங்களில் ஒரு சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த தரைக்காற்றுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
துாத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலுார், கடலுார் மாவட்டங்கள், புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில், அடுத்த ஐந்து நாட்களுக்கு பலத்த சூறாவளி வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கரையை கடப்பது எங்கே?
வங்கக்கடலில் இலங்கை அருகில் உருவாகியுள்ள தித்வா புயல், வடக்கு, வடமேற்கு திசையில் நகர்கிறது. நேற்றைய நிலவரப்படி, அதன் உத்தேச பாதை விபரத்தை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இதன்படி, நாளை மறுதினம் தித்வா புயல் சென்னையை நெருங்கி வர வாய்ப்புள்ளது. ஆனால், இங்கு கரையை கடப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று தெரிகிறது. சென்னையை கடந்த பின், தித்வா புயல் ஆந்திரா நோக்கி செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புயல் கரையை கடக்காமல் கடலில் இருக்கும் நிலையில், கடலோர மாவட்டங்களில் 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்ய வாய்ப்புள்ளது என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan