Paristamil Navigation Paristamil advert login

தனியார் பங்களிப்பால் விண்வெளி துறை வளர்ச்சி பெறும்: இஸ்ரோ தலைவர்

தனியார் பங்களிப்பால் விண்வெளி துறை வளர்ச்சி பெறும்: இஸ்ரோ தலைவர்

27 கார்த்திகை 2025 வியாழன் 13:38 | பார்வைகள் : 100


விண்வெளி துறையில் தனியாரின் பங்களிப்பு வளர்ச்சியை தரும் என்று இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.

நாகர்கோவிலில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: 2040 -ம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடுகளின் விண்வெளி திட்டங்களுக்கு இணையாக இஸ்ரோவின் திட்டங்கள் இருக்கும். அதற்கான இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம். திருநெல்வேலி மகேந்திரகிரி இஸ்ரோ மையம் 8 ஆயிரம் ஏக்கரில் அமைந்துள்ளது. 1200 கோடி ரூபாய் மதிப்பில் ஆய்வுக் கூடங்கள் உள்ளன.

விண்வெளித்துறையில் தனியார் என்பது வரவேற்க கூடிய விஷயம், தற்போது விண்ணில் இந்தியாவின் 57 செயற்கை கோள்கள் உள்ளன. இன்னும் மூன்று ஆண்டுகளில் இதை மூன்று மடங்காக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஆண்டுதோறும் 50 செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்படும். அரசு மட்டும் இதைச் செய்ய முடியாது. அதனால் தான் தனியார் பங்களிப்பும் இந்த திட்டத்தில் இணைக்கப்பட்டது. தனியார் பங்களிப்பு என்பது பிரதமரின் சிறப்பான திட்டமாகும்.

பேரிடர் எச்சரிக்கை தொடர்பாக துல்லியமான தகவல்களை தெரிவிக்க இஸ்ரோ செயற்கைக்கோள்களை செலுத்தி வருகிறது. புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். சந்திராயன் - 5 திட்டம் ஜப்பானின் விண்வெளி மையத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான விண்வெளி மையம் 2035- ல் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் 6000 கிலோ செயற்கைக்கோள் வணிகரீதியாக நமது ராக்கெட்டிலிருந்து ஏவப்பட இருக்கிறது. டிசம்பரில் இது அனுப்பி வைக்கப்படும். சுபான்ஷூ சுக்லா நாசாவின் உதவியுடன் விண்வெளிக்குச் சென்று திரும்பி உள்ளார். அது அமெரிக்க-இந்திய கூட்டு முயற்சியாகும். 2040-ல் இந்தியாவின் ராக்கெட் மூலம் சந்திரனுக்கு ஆட்களை அனுப்ப உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்