சூடு பிடிக்கிறது அரசியல் களம்; செங்கோட்டையன் தவெக தலைவர் விஜய் உடன் சந்திப்பு
27 கார்த்திகை 2025 வியாழன் 05:24 | பார்வைகள் : 101
நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணையவிருக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து இன்று மாலை விஜயை அவரது வீட்டில் செங்கோட்டையன் சந்தித்தார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவின் ஆரம்ப கால உறுப்பினர்களில் ஒருவர். ஈரோடு மாவட்டத்திலிருந்து 9 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டவர். அதிமுகவில் அமைச்சராகவும் கட்சியில் பல்வேறு பொறுப்புகளிலும் பணியாற்றியவர். அவருக்கும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்.,க்கும் சில மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
இந்நிலையில் ஓபிஎஸ் டிடிவி தினகரன் உள்ளிட்டோரை கட்சியில் மீண்டும் இணைக்க வேண்டும் என்று கூறிய செங்கோட்டையன், அதற்கு கட்சி தலைமைக்கு காலக்கெடு விதித்தார். இதனால் அவரது கட்சி பதவிகள் பறிக்கப்பட்டன. ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் தேவர் குருபூஜை விழாவில் செங்கோட்டையன் கலந்து கொண்டதைத் தொடர்ந்து, அதிமுகவில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
இந்நிலையில், செங்கோட்டையன் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகத்தில் இணைய முடிவு செய்துள்ளார். இதுவரை வெளிப்படையாக அவர் அறிவிப்பு எதுவும் வெளியிடாத நிலையில், இன்று தனது எம்எல்ஏ பதவியை செங்கோட்டையன் ராஜினாமா செய்தார். சட்டசபை வளாகத்துக்கு வந்த அவர், தனது ராஜினாமா கடிதத்தை, சபாநாயகர் அப்பாவு இடம் இன்று வழங்கினார்.
அடுத்த கட்ட முடிவு பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, ''இன்னும் ஒரு நாள் பொறுத்திருங்கள்,'' என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து இன்று மாலை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜயை, செங்கோட்டையன் சந்தித்து பேசினார்.
யார் செங்கோட்டையன்?
* செங்கோட்டையன், 1977 முதல் 10 முறை சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளார். இதில் 1996 தேர்தலில் மட்டும் தோல்வியை தழுவியுள்ளார். மற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.
* முதல் தேர்தலான 1977 தேர்தலில் மட்டும் சத்தியமங்கலம் தொகுதியில் போட்டியிட்டவர், அதன் பிறகு தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தான் போட்டியிட்டு வந்துள்ளார்.1991ல் ஜெயலலிதா முதல் முறை முதல்வர் ஆனபோது, செங்கோட்டையனுக்கு போக்குவரத்து துறையில் அமைச்சர் பதவி வழங்கினார்.
* 2011ல் ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றபோது, செங்கோட்டையனுக்கு வேளாண் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், ஒரு சில மாதங்களிலேயே அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அதன்பிறகு, ஜெயலலிதா இறந்து, இபிஎஸ் முதல்வர் ஆன பிறகே செங்கோட்டையனுக்கு அமைச்சர் பதவி திரும்பக் கிடைத்தது.
செங்கோட்டையன் முடிவு பற்றி உங்கள் கருத்தை சொல்லுங்க வாசகர்களே!
1.தவெகவுக்கு ஜாக்பாட்
2.அதிமுகவுக்கு பின்னடைவு
3.தட்டித் துாக்க தவறியது திமுக
4.அவருக்கு ஒரே வழி அதுதான்






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan