பா.ஜ., கூட்டணியில் சேர தமிழக கட்சிகள் தயாராகின்றனர்!
26 கார்த்திகை 2025 புதன் 13:19 | பார்வைகள் : 100
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், பா.ஜ., கூட்டணியில் ஐக்கியமாக, பா.ம.க., உள்ளிட்ட கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. அதன் துவக்கமாக, டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி சந்தித்துப் பேசியுள்ளார். இந்நிலையில், அ.ம.மு.க., தலைவர் தினகரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரை மீண்டும் பா.ஜ., கூட்டணியில் சேர்ப்பது பற்றி பேச, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று டில்லி சென்றுள்ளார். தமிழகத்தில், தே.ஜ., கூட்டணிக்கு அ.தி.மு.க., தலைமை ஏற்றுள்ளது. அதில், பா.ஜ., - த.மா.கா., மற்றும் புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் மட்டுமே உள்ளன.
வலுவான நிலையில் உள்ள தி.மு.க., கூட்டணியை எதிர்கொள்ள, பா.ஜ., தன் அணியை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
பிரிந்து கிடக்கிறது
கடந்த 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இருந்த பா.ம.க., தற்போது, ராமதாஸ், அன்புமணி தலைமையில் இரண்டு அணிகளாக பிரிந்து கிடக்கிறது.
ஆனாலும், வட மாவட்டங்களில் பலம் வாய்ந்த சக்தியாக அக்கட்சி இருந்து வருகிறது. கடந்த சில தேர்தல்களில் அக்கட்சி தோல்வியை சந்தித்தாலும், கூட்டணி அரசியலில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
வடமாவட்டங்களில் உள்ள 90 சட்டசபை தொகுதிகளில் அடர்த்தியான ஓட்டு வங்கியை வைத்துள்ள பா.ம.க.,வுக்கு, வரும் தேர்தலில் 5 சதவீத ஓட்டுகள் கூடுதலாக கிடைக்கும் என, மத்திய உளவுத்துறை கணித்துள்ளது.
எனவே, கூட்டணியில் பா.ம.க., இடம்பெற்றால் வெற்றிக்கு சாதகமாக இருக்கும் என, பா.ஜ., மேலிடம் கருதுகிறது. ஆனால், கட்சியின் சின்னம், பெயர், கொடி யாருக்கு என்ற சண்டை பா.ம.க.,வில் நடந்து வருகிறது. அதற்கு உரிமை கோரி, ராமதாஸ், அன்புமணி தரப்பினர் தேர்தல் கமிஷனில் மனு அளித்து உள்ளனர்.
இப்பின்னணியில், தே.ஜ., கூட்டணியில் அன்புமணி தலைமையிலான பா.ம.க., இணையும் என்றும், தி.மு.க., கூட்டணியில் ராமதாஸ் பா.ம.க., சேரும் என்றும் பேசப்படுகிறது.
தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெறவும், ராமதாஸ் தலைமையிலான பா.ம.க., தான் உண்மையான இயக்கம் என்பதை விளக்கவும், ஆவணங்களுடன் டில்லி சென்றிருந்தார் ஜி.கே.மணி.
அங்கு மூன்று நாட்கள் தங்கியிருந்த அவர், தேர்தல் கமிஷன் அதிகாரிகளையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து பேசியுள்ளார்.
ஓட்டு குறையும்
அப்போது அமித் ஷா, 'தே.ஜ., கூட்டணியில், ஒருங்கிணைந்த பா.ம.க., இடம் பெற வேண்டும். ராமதாஸ், அன்புமணி பிரிந்து செயல்படுவதால், ஓட்டு சதவீதம் குறைந்து விடும். இது, தே.ஜ., கூட்டணி வெற்றிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஒன்றுபட்ட பா.ம.க.,வே தே.ஜ., கூட்டணிக்கு தேவை' என, ஜி.கே.மணியிடம் கூறியுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையில், அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் அடுத்த மாதம் 10ல் நடக்கிறது. அதில், பிரிந்தவர்களை இணைக்கும் முடிவு எடுக்கப்படவில்லை என்றால், தனிக்கட்சி துவக்க பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார். அதற்காக, டிச., 15ல், தன் ஆதரவாளர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.
அவர் தனிக்கட்சி துவங்கினால், தி.மு.க., அல்லது த.வெ.க., கூட்டணியில் சேருவதற்கான வாய்ப்புகளே உள்ளன. அவர் எடுக்கும் முடிவை ஏற்கும் நிலையில் தான் தினகரனும் இருக்கிறார். பழனிசாமியை தோற்கடிக்க வேண்டும் என்பது தான் இவர்கள் இருவரின் பொதுவான கருத்தாக இருக்கிறது.
இதை எப்படியாவது தடுத்தாக வேண்டிய நெருக்கடியில், தமிழக பா.ஜ., தலைமை இருக்கிறது. இவர்கள் பிரிந்து சென்று த.வெ.க.,வுடன் கைகோர்த்தால், அது தே.ஜ., கூட்டணி வெற்றியை கேள்விக்குறியாக்கி விடும் என, நயினார் நாகேந்திரன் நம்புகிறார்.
எனவே, பழனிசாமிக்கு அழுத்தம் கொடுத்து, இருவரையும் மீண்டும் தே.ஜ., கூட்டணியில் சேர்க்கும் முயற்சியில் நயினார் இறங்கி இருக்கிறார். அதுபற்றி அமித் ஷா உள்ளிட்டோரிடம் பேச திட்டமிட்டு, அவர் நேற்று அவசரமாக டில்லி சென்றுள்ளார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan