அரசு வேலைகளை விற்று சம்பாதிக்கும் தமிழக அமைச்சர்கள்: அண்ணாமலை குற்றச்சாட்டு
26 கார்த்திகை 2025 புதன் 06:19 | பார்வைகள் : 102
முதல்வர் ஸ்டாலின், தன் அமைச்சர்கள், அரசு பணி நியமனத்துக்காக பணம் வசூலிப்பது கூட தெரியாத அளவுக்கு பொறுப்பற்ற முதல்வராக இருக்கிறாரா அல்லது அவருக்கு தெரிந்தே தான் இவை எல்லாம் நடக்கின்றனவா' என, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை:
பல லட்சம் தமிழக இளைஞர்கள், அரசு பணிக்காக பல ஆண்டுகள் தங்களை அர்ப்பணித்து, கடுமையாக உழைத்து கொண்டிருக்க, தி.மு.க., அமைச்சர்கள் அரசு பணிகளை விற்று, பணம் சம்பாதித்து கொண்டிருக்கின்றனர்.
ஏற்கனவே அமைச்சர் நேருவின் துறையில், பணி நியமனத்திற்கு பணம் வாங்கியதாக புகார் எழுந்த நிலையில், நாளை நடக்க உள்ள கூட்டுறவு அரசு பணியாளர்களுக்கான நேர்முக தேர்வில், 10 லட்சம் ரூபாய் முதல், 15 லட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் என்னைத் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தனர். முதல்வர் ஸ்டாலினுக்கு தெரிந்தே தான் இவை எல்லாம் நடக்கின்றனவா?
நாளை நடக்கும் கூட்டுறவு அரசு பணியாளர்களுக்கான நேர்முக தேர்வில் நேர்மையான, திறமையான இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். தி.மு.க., அமைச்சர் பெரியகருப்பன், தனது பொறுப்பை உணர்ந்து, நேர்முக தேர்வு நேர்மையாக நடப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அவரது இன்னொரு அறிக்கை:
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த கோவை செம்மொழி பூங்கா திறப்பு விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை.
தமிழகத்தில், செம்மொழி பூங்காக்கள், தமிழ் மொழியை போற்றுவதற்காக அமைக்கப்படுகின்றன என்று, தி.மு.க., கூறுவது தான் இதில் நகைமுரண்.
உயிரோடும், உணர்வோடும் இருக்க வேண்டிய தமிழ் பற்றை, தங்கள் பிரிவினைவாத அரசியலுக்காகவும், தங்கள் பிழைப்புவாத வியாபாரத்திற்காகவும் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது தி.மு.க.,
அதனால் தான், தமிழ் மொழி மீது அக்கறை இருப்பதுபோல காட்டி கொள்ளும் முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக அரசு விழா துவக்கத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்பது கூட உரைக்கவில்லை.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan