Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் இ-நீதிமன்றம் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

இலங்கையில் இ-நீதிமன்றம் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

17 மார்கழி 2025 புதன் 17:42 | பார்வைகள் : 162


 

இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்கும் செயல்முறையான ‘இ-நீதிமன்றம்’ (e-Court) திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இலங்கையின் நீதித்துறை அமைப்பை டிஜிட்டல் மயமாக்குவது ஒரு தேசிய முன்னுரிமை உத்தியாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த டிஜிட்டல் உருமாற்றச் செயல்பாட்டின் ஆரம்ப கட்டமாக, தற்போது உயர் நீதிமன்றம் அதன் வழக்கு நிர்வாகத்திற்காக ஒரு இணையதளம் மற்றும் தொடர்புடைய மின்னணு முறைமையை (e-CMS) அறிமுகப்படுத்தி, வெற்றிகரமாகச் செயல்படுத்தி வருகிறது.

உயர் நீதிமன்றத்திற்காக உருவாக்கப்பட்ட இணையதளம் மற்றும் e-CMS முறைமையை, மேன்முறையீட்டு நீதிமன்றம், நீதிச் சேவை ஆணைக்குழு, நீதிபதிகள் நிறுவனம் உட்பட நாடு முழுவதும் பரவியுள்ள அனைத்து நீதி நிறுவனங்களுக்கும் மாற்றியமைத்து பயன்படுத்துவதே இ-நீதிமன்றம் திட்டத்தின் நோக்கமாகும்.

இதன் மூலம் தேசிய நீதித்துறை தரவு வலையமைப்பை (National Judicial Data Grid) ஸ்தாபிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம், நாட்டில் நீண்டகாலமாக நீதித்துறை எதிர்கொள்ளும் வழக்கு தாமதங்கள், தரவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாமை, மற்றும் நீதிக்கு காலந்தவறிய அணுகல் மற்றும் நடைமுறைச் செயல்திறன் இன்மை போன்ற சிக்கல்களைத் தவிர்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல், 2026-2030 அரச முதலீட்டுத் வேலைத்திட்டம் மற்றும் ‘கிளீன் ஶ்ரீலங்கா'(Clean Sri Lanka) உத்திகளுடன் இணங்கி, இ-நீதிமன்றம் திட்டத்தை திறம்படவும், வினைத்திறனாகவும் செயற்படுத்துவதற்காக, ‘கிளீன் ஶ்ரீலங்கா’ திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து, 150 மில்லியன் ரூபா நிதியை நீதிச் சேவை ஆணைக்குழுவுக்கு வழங்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்