Paristamil Navigation Paristamil advert login

காதல் கோட்டை பாகம் 2 உருவாகிறதா?

காதல் கோட்டை பாகம் 2 உருவாகிறதா?

15 மார்கழி 2025 திங்கள் 13:46 | பார்வைகள் : 200


1996 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் காதல் கோட்டை. அகத்தியன் இயக்கத்தில் அஜித்துக்கு ஜோடியாக தேவயானி படத்தில் நடித்திருந்தார். 90கள் காலகட்டத்தில் ரசிகர்கள் பெரும்பாலும் காதல் கதைகளை பார்ப்பதையே அதிகமாக விரும்பினர். அப்படி ரசிகர்களுக்கு ஒரு தீனி போட்ட படமாக அமைந்தது தான் காதல் கோட்டை. இது ஒரு புதிய பரிமாணத்தை கொடுத்தது. ஒரு புதிய கதைகளத்தையும் தனித்துவமான காதலையும் விளக்குவதாக இந்த படம் அமைந்தது.

பார்வையாளர்கள் மத்தியில் இந்த ஒரு படம் அழியாத முத்திரையை பதித்தது. அதற்கு ஏற்ப படமும் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. அஜித் தேவயானி இவர்களைத் தவிர படத்தில் ஹீரா, தலைவாசல் விஜய், கரண் என முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சிவசக்தி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் இந்த படத்தை தயாரித்திருந்தார். 250 நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளி விழா கண்ட படமாகவும் காதல் கோட்டை திரைப்படம் அமைந்தது.

அது மட்டுமல்ல சிறந்த இயக்கம் மற்றும் சிறந்த திரை கதைக்காக அகத்தியனுக்கு தேசிய விருதும் இந்த படத்திற்காக கிடைத்தது. அந்த காலகட்டத்தில் இந்த படம் 12 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் படத்தைப் பற்றி சமீபத்திய ஒரு பேட்டியில் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். இந்த படத்தின் கிளைமாக்ஸில் இருவரும் பிரிவதாக தான் இயக்குனர் எழுதி இருந்தாராம். ஆனால் இரண்டு பேரும் சேர்ந்தால் இந்த படத்தை நான் தயாரிக்கிறேன் என சிவசக்தி பாண்டியன் பிடிவாதமாக இருந்திருக்கிறார்.

அதைப்போல படமும் வெளியாகி தியேட்டரில் படத்தை பார்க்கும் பொழுது கிளைமாக்ஸில் தேவயானி சூர்யா எனக் கத்த ரசிகர்கள் அத்தனை பேரும் எழுந்து நின்று கைத்தட்டி ஆரவாரம் செய்து இருக்கின்றனர். அதன் பிறகு அகத்தியன் ஓடி வந்து தயாரிப்பாளரை கட்டிப்பிடித்து நீங்கள் ஜெயித்து விட்டீர்கள் என்று கூறினாராம். இதைப் பற்றி சிவசக்தி பாண்டியன் கூறும் பொழுது ஜெயிப்பது தோற்பது என்பது தாண்டி எல்லா டெக்னீசியன்களின் ஒத்துழைப்பும் இதில் இருக்கிறது.

இப்பவும் காதல் கோட்டை படத்தின் தயாரிப்பாளர் என்று நான் நாள்தோறும் சொல்லிக் கொள்ளவில்லை. அடுத்த வெற்றியை நோக்கித்தான் நான் தயாராகி கொண்டிருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் இன்னொரு காதல் கோட்டை திரைப்படத்தை எதிர்நோக்கி நான் சென்று கொண்டிருக்கின்றேன். ஆனால் இன்றைய காலகட்ட சினிமா வேறு மாதிரியாக இருக்கிறது. பார்ப்போம் எல்லாம் கூடி அமைந்தால் அப்படி ஒரு திரைப்படத்தை அமைக்கும் முயற்சியில் இறங்கலாம் என சிவசக்தி பாண்டியன் கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்