Paristamil Navigation Paristamil advert login

சபரிமலை ஸ்பெஷல் அரவண பாயாசம்!

சபரிமலை ஸ்பெஷல் அரவண பாயாசம்!

14 மார்கழி 2025 ஞாயிறு 12:15 | பார்வைகள் : 124


கார்த்திகை மாதம் பிறந்தாலே ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து 48 நாள் மண்டல விரதம் இருந்து சபரிமலை சென்றுவர துவங்கி விடுவார்கள். "சுவாமியே சரணம் ஐயப்பா" என்ற பக்தி கோஷம் எங்கும் ஒலிக்கும்.

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு, சபரிமலை ஐயப்பன் கோயிலின் பிரதான பிரசாதமான அரவணை பாயசம் வழங்கப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலின் தனித்துவமான பிரசாதங்களில் அரவண பாயாசம் முக்கியமானது. இதன் சுவையும், மணமும் நன்றாக இருக்கும். இதனால் அனைவருக்கும் பிடித்தமான பிரசாதமாக உள்ளது.வீட்டிலிருந்தபடியே சுவையாக அரவண பாயாசத்தை செய்வது எப்படி என்பது பற்றி முழு விவரம் காண்போம்.

அரவண பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்: கேரளா மட்டை அரிசி (சிவப்பு அரிசி) - 200 கிராம், வெல்லம் - 400 கிராம், தேங்காய் துண்டுகள் - 1 கப், சுக்கு தூள் - 2 டீஸ்பூன், முந்திரி பருப்பு - 100 கிராம், தண்ணீர் - தேவையான அளவு, நெய் - தேவையான அளவு.

அரவண பாயாசம் செய்வதற்கு முதலில் வெல்லத்தை கரைத்து கொள்ளலாம். அதற்கு, ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீர் ஊற்றி பொடித்த வெல்லம் சேர்த்து கரைக்கவும். வெல்லம் நன்கு கலந்து வந்ததும், அடுப்பை அணைத்து தனியாக வைக்கவும்.இப்போது ஒரு அடிக்கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் தேங்காய் துண்டுகளை சேர்த்து வறுக்கவும். தேங்காய் பொன்னிறமாக வறுப்பட்டு வந்ததும் தனியாக மாற்றி வைக்கவும்.

இப்போது அதே பாத்திரத்தில் மீண்டும் நெய் விட்டு, முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக வைக்கவும். இப்போது அரிசியை நன்கு கழுவி பாத்திரத்தில் சேர்த்து ஒன்னுக்கு ஐந்து அல்லது ஆறு பங்கு (ஒன்றரை லிட்டர்) எனும் கணக்கில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

தண்ணீர் நன்கு கொதித்து வந்ததும், ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து கலந்து மூடி போட்டு அரிசியை வேக விடவும். சாதம் வெந்து வந்ததும், கரைத்து வைத்த வெல்லத்தை வடிகட்டி சேர்க்கவும். இப்போது அடுப்பை மிதமான தீயில் வைத்து அரிசியை நன்கு கலந்து விடவும். கூடவே சுக்கு பொடி சேர்த்து கலந்து விடவும்.

பின்னர், மீண்டும் மூன்று டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கலந்து கொள்ளவும். பாயாசம் கொதித்து கட்டியாகி வந்ததும் அடுப்பை அணைக்கவும். இப்போது வறுத்த தேங்காய் துண்டுகள் மற்றும் முந்திரியை சேர்த்து கலந்து மூடி விடவும். 10 நிமிடங்களுக்கு பின்னர், பாத்திரைத்தை திறந்தால் அரவண பாயாசம் தயார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்