Paristamil Navigation Paristamil advert login

கேரள உள்ளாட்சி தேர்தலில் முதன் முறையாக பா.ஜ., சாதனை!

கேரள உள்ளாட்சி தேர்தலில் முதன் முறையாக பா.ஜ., சாதனை!

14 மார்கழி 2025 ஞாயிறு 06:05 | பார்வைகள் : 166


கேரளா உள்ளாட்சி தேர்தலில், 45 ஆண்டுகளாக ஆளும் இடது ஜனநாயக முன்னணி வசமிருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி, பா.ஜ., சாதனை படைத்துள்ளது.

மாநகராட்சி, நகராட்சி, கிராம பஞ்சாயத்து என அனைத்திலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி அபார வெற்றி பெற்றுள்ளது. இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் கூட்டணி, இந்த தேர்தலில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. கேரளாவில், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியைச் சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.

இங்கு, ஆறு மாநகராட் சிகள், 86 நகராட்சிகள் உட்பட, 1,119 உள்ளாட்சி அமைப்புகளுக்கு, கடந்த 9 மற்றும் 11ல் தேர்தல் நடந்தது. சட்டசபை தேர்தலுக்கு ஐந்து மாதங்களே உள்ள நிலையில், இந்த தேர்தல் அதற்கு முன்னோ ட்டமாக பார்க்கப்பட்டது.

கலக்கம்


இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டன. அதன்படி, மொத்தமுள்ள ஆறு மாநகராட்சிகளில், கொல்லம், கொச்சி, திருச்சூர், கண்ணுார் ஆகிய மாநகராட்சிகளை, காங்., தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கைப்பற்றி உள்ளது.

இதில், கொல்லம் மாநகராட்சி, 25 ஆண்டுகளாகவும், திருச்சூர் மாநகராட்சி, 10 ஆண்டுகளாகவும் இடது ஜனநாயக முன்னணி வசமிருந்தது.

கோழிக்கோடு மாநகராட்சியில் இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ள நிலையில், திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ., கைப்பற்றி உள்ளது. கடந்த 45 ஆண்டு களாக இடது ஜனநாயக முன்னணி வசமிருந்த திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றி, பா.ஜ., சாதனை படைத்துள்ளது.

மொத்தமுள்ள ஆறு மாநகராட்சிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி கிடைத்துள்ளதால், ஆளும் கூட்டணி கலக்கம் அடைந்துள்ளது.

அதே போல், 86 நகராட்சிகளில், ஐக்கிய ஜனநாயக முன்னணி 54; இடது ஜனநாயக முன்னணி 28, பா.ஜ., கூட்டணி இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. மற்றவை இரண்டு இடங்களில் வென்றுள்ளன.

அதுபோல், 941 கிராம பஞ்சாயத்துக்கு நடந்த தேர்தலில், 504ஐ ஐக்கிய ஜனநாயக முன்னணி கைப்பற்றி உள்ளது. 341 கிராம பஞ்சாயத்துகளில், இடது ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ள நிலையில், பா.ஜ., கூட்டணி, 26ஐ கைப்பற்றி உள்ளது. 14 மாவட்ட பஞ்சாயத்துகளில், ஆளும் இடது ஜனநாயக முன்னணி, ஐக்கிய ஜனநாயக முன்னணி தலா ஏழு இடங்களை கைப்பற்றி உள்ளன.

பின்னடைவு


கேரள சட்டசபைக்கு தமிழகத்துடன் சேர்த்து அடுத்தாண்டு ஏப்ரலில் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், உள்ளாட்சி தேர்தலில் ஆளும் இடது ஜனநாயக முன்னணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

தேர்தலுக்கு முன், அங்கன்வாடி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, மகளிர் பாதுகாப்பு திட்டங்கள் உள்ளிட்ட அறிவிப்புகளை ஆளுங்கட்சி வெளியிட்டாலும் அது இந்தத் தேர்தலில் எடுபடவில்லை.

இடதுசாரிகளின் கோட்டையாகக் கருதப்படும் திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில், பா.ஜ., வலுவாக காலுான்றி உள்ளதை, உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. அபார வெற்றி பெற்றுள்ள ஐக்கிய ஜனநாயக முன்னணி, சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தற்போதே தயாராகி விட்டது.

இந்த முடிவுகள், வரும் சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும் என அக்கூட்டணி தலைவர்கள் நம்புகின்றனர்.

மஹாராஷ்டிரா, ஹரியானா, பீஹார் என அடுத்தடுத்த சட்டசபை தேர்தல் தோல்விகளால் வருத்தத்தில் இருந்த காங்., தலைவர்களுக்கு, கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் புத்துணர்ச்சியையும், நம்பிக்கையையும் அளித்துள்ளன.

வர்த்தக‌ விளம்பரங்கள்