Paristamil Navigation Paristamil advert login

ரஜினிகாந்த் 75வது பிறந்த நாளில் எங்கு இருக்கிறார் ?

ரஜினிகாந்த் 75வது  பிறந்த நாளில் எங்கு இருக்கிறார் ?

12 மார்கழி 2025 வெள்ளி 13:12 | பார்வைகள் : 597


பொதுவாக தனது பிறந்த நாளில் நடிகர் ரஜினிகாந்த் யாரையும் சந்திப்பதில்லை. போனில் அதிகம் பேசுவதில்லை. ரசிகர்கள், விஐபி உட்பட யாருடைய வாழ்த்தையும் நேரடியாக ஏற்றுக்கொள்ளவதில்லை என்ற மனநிலையில் பல ஆண்டுகளாக இருக்கிறார். பெரும்பாலும் அவர் பிறந்தநாளில் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள பண்ணை வீடு அல்லது போயஸ்கார்டன் வீட்டில்தான் இருப்பார் என்று கூறப்படுகிறது.

தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு நாட்களில் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வந்து ரசிகர்களுடைய வாழ்த்தை ஏற்றுக் கொள்வார் என்பது வழக்கமாக இருக்கிறது. இந்த ஆண்டு 75வது ஆண்டு பிறந்த நாள் என்பதால் அவர் தங்களை சந்திப்பார் என ரசிகர்கள் நம்பினார். நேற்று நள்ளிரவு முதலே போயஸ் கார்டன் வீட்டு வாசலில் குவிந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு போயஸ்கார்டன் வீட்டு வாசலில் இனிப்பு வழங்கி பிறந்தநாளை கொண்டாடினர்.

அப்போது லதா ரஜினிகாந்த் மட்டுமே வெளியே வந்து வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டார். ரஜினிகாந்த் ஊரில் இல்லை என்ற வழக்கமான தகவல் கூறப்பட்டது. அது குறித்து விசாரித்தால் அவர் கோவாவில் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பில் இருப்பதாகவும், திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய சென்றிருப்பதாகவும் ரஜினி தரப்பில் கூறப்பட்டது. ஆனால் இன்று காலை 'ஜெயிலர் 2' செட்டில் ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாடி ,கேக் வெட்டிய வீடியோ வெளியானது.

அப்படியானால் சென்னையில் தான் ரஜினிகாந்த் இருக்கிறாரா? அல்லது 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு ஹைதராபாத், கோவா வெளியூரில் நடக்கிறதா என ரசிகர்கள் குழப்பம் அடைந்தனர். ஆனால் நிஜம் அறிந்த தரப்போ இன்று ஜெயிலர் 2 படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. ஆனால் செட்டில் ரஜினிகாந்த் இல்லை. இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் கேக் வெட்டும் நிகழ்வு நேற்று சென்னை ஆதித்யராம் ஸ்டூடியோவில் நடந்தது. இன்று அந்த போட்டோ, வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. சென்னை வீட்டில் அல்லது கேளம்பாக்கத்தில் தான் ரஜினி இருக்க வாய்ப்பு என்றும், தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை, 'படையப்பா' ரீ ரிலீஸை ரகசியமாக பார்த்து ரசித்து வருகிறார் என்றும் சிலர் சொல்கின்றனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்