அருணாச்சல் விபத்து: 18 பேர் உடல்கள் மீட்பு; பிரதமர் மோடி இரங்கல்
12 மார்கழி 2025 வெள்ளி 11:30 | பார்வைகள் : 3041
அருணாச்சலப் பிரதேசத்தில், தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரி மலையில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேரை தேடும் பணி நடந்து வருகிறது.
அருணாச்சலப் பிரதேசத்தில், இந்திய-சீன எல்லையோரம் உள்ள ஹயுலியாங் - சக்லகாம் சாலையில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று, பல நூறு அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் இதுவரை 18 பேர் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் மூன்று பேரை தேடும் பணி நடந்து வருகிறது.
ஆட்கள் செல்ல முடியாத பகுதி என்பதால், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மீட்பு குழுவினர் ட்ரோன் மற்றும் கயிறு உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். பலரின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு உள்ளது. பள்ளத்தாக்கில் இருந்து உடல்களை மேலே கொண்டு வரும் பணி நடந்து வருகிறது. காணாமல் போனவர்களை தேடும் பணியும் நடந்து வருகிறது.
பிரதமர் மோடி இரங்கல்:
லாரி விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது : அருணாச்சலில் நடந்த விபத்தை அறிந்து, மிகுந்த மன வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
நிவாரண நிதி :
மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, பிரதமர் நிவாரண நிதியில் இருந்து, தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 ரூபாயும் நிவாரண நிதி வழங்கப்படும் என மோடி அறிவித்துள்ளார். விபத்து குறித்த காரணங்களை கண்டறிய, மாநில அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்துள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan