Paristamil Navigation Paristamil advert login

தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விடலாம் என பா.ஜ., - அ.தி.மு.க., தப்புக்கணக்கு ! ஸ்டாலின்

தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விடலாம் என பா.ஜ., - அ.தி.மு.க., தப்புக்கணக்கு ! ஸ்டாலின்

27 ஐப்பசி 2025 திங்கள் 11:04 | பார்வைகள் : 137


வாக்காளர் பட்டியலில் இருந்து சிறுபான்மையினர் பெயர்களை நீக்கி விட்டால், தமிழகத்தில் ஆட்சியை பிடித்து விடலாம் என, பா.ஜ., - அ.தி.மு.க., கட்சிகள் தப்புக்கணக்கு போடுகின்றன' எனக்கூறி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், தேர்தல் ஆணையத்தை தன் கைப்பாவையாக பயன்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, அவர் தன் கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பறித்திருக்கிறது


வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை, அடுத்த வாரம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்த உள்ளதாக, தலைமை தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. பீஹார் மாநிலத்தில், 65 லட்சத்திற்கும் அதிகமான மக்களின் ஓட்டுரிமையை, இதே சிறப்பு தீவிர திருத்தம் வாயிலாக தேர்தல் கமிஷன் பறித்திருக்கிறது.

தமிழகத்திலும் அதே குறுக்கு வழியை பின்பற்ற, தன் கைப்பாவையாக தேர்தல் கமிஷனை பயன்படுத்த மத்திய அரசு முயற்சிக்கிறது.

உழைக்கும் மக்கள், பட்டியல் இனத்தவர், சிறுபான்மையினர், பெண்கள் உள்ளிட்டோரின் பெயர்களை, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி விட்டால், பா.ஜ.,வும், அதன் கூட்டாளியான அ.தி.மு.க.,வும் வெற்றி பெற்று விடலாம் என, கணக்கு போடுகின்றன.

அதாவது, நேரடியாக தேர்தல் களத்தில் மக்களை சந்திக்க வலிமை இல்லாதவர்கள், மக்களின் ஓட்டுரிமையை பறித்து விட்டு, வெற்றி பெறலாம் என போடுகிற கணக்கானது, தமிழகத்தைப் பொறுத்த வரை தப்புக்கணக்காகி விடும்.

வலிமையுண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் முறையை கைவிட வேண்டும்.

வாக்காளர் பட்டியலை சீர்படுத்த வேண்டும் என்றால், அதற்குரிய வழிமுறைகளை பின்பற்றி, கால அவகாசத்தை வழங்க வேண்டும் என, தேர்தல் கமிஷனிடம் தி.மு.க., நேரடியாக வலியுறுத்தி உள்ளது.

அதையும் மீறி எடுக்கப்படும், ஜனநாயக விரோத செயல்பாடுகளை, சட்ட ரீதியாக எதிர் கொள்வதுடன், மக்களுடன் நின்று களத்தில் எதிர்கொள்ளும் வலிமை தி.மு.க.,விற்கு உண்டு.

எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி, பருவமழை காலத்திலும், அரசியல் களத்தில் ஏதேனும் அறுவடை செய்ய முடியுமா என்று தான் செயல்படுகிறாரே தவிர, ஆக்கப்பூர்வமாகவோ, மக்களுக்கு உறுதுணையாகவோ, எதையும் செய்யும் எண்ணம் இல்லாமல் இருக்கிறார்.

நெல் மூட்டைகள் கொள்முதல் குறித்து, எதிர்க்கட்சி தலைவரும், அவரது கட்சியினரும் சொன்னவை எல்லாம் புளுகு மூட்டைகள் என்பதை, அரசின் தொடர் செயல்பாடுகள் நிரூபித்து விட்டன. பொய்களையும், அவதுாறுகளையும் புறந்தள்ளி, நாம் தொடர்ந்து, மக்களுக்காக பணியாற்றிக் கொண்டே இருப்போம்.

தேர்தலுக்கு முன் என்னென்ன பணிகளை, எப்படி செய்ய வேண்டும்; கட்சி தலைமை முதல் கடைக்கோடியில் உள்ள தொண்டர்கள் வரை, அனைவரையும் ஒருங்கிணைத்து எப்படி செயல்படுவது என்பது குறித்து விவாதிக்க, நாளை காலை மாமல்லபுரத்தில் பயிற்சி கூட்டம் நடத்தப்பட உள்ளது.

'என் ஓட்டுச்சாவடி -வெற்றி ஓட்டுச்சாவடி' என்ற இலக்குடன் கட்சி தொண்டர்கள் களப்பணியாற்றுவதற்காக, இந்த பயிற்சி கூட்டம் நடக்கிறது.

அனைவரும் ஒருங்கிணைந்து, 'என் ஓட்டுச்சாவடி - வெற்றி ஓட்டுச்சாவடி' என்பதை முன்னெடுக்க வேண்டும். மாநில நிர்வாகியாக இருந்தாலும், அவரவர் ஓட்டுச்சாவடியில் வெற்றி பெற வேண்டும் என்பது இலக்காக இருக்க வேண்டும். 'என் ஓட்டுச்சாவடியில் தி.மு.க., கூட்டணியை வெற்றி பெறச் செய்வேன்' என ஒவ்வொரு தொண்டரும் உறுதியேற்று களப்பணியாற்றினால், எல்லா ஓட்டுச்சாவடிகளிலும் முன்னிலை பெற்று, ஆட்சி அமைவது உறுதியாகி விடும். மக்கள் நலனையும், மாநில உரிமைகளையும் காக்கின்ற தி.மு.க., ஆட்சியில், தமிழகம் தலைகுனியாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்