Paristamil Navigation Paristamil advert login

பயங்கரவாதிகள் பட்டியலில் நடிகர் சல்மான் கான் பெயரை சேர்த்து பாக்., அரசு அடாவடி

பயங்கரவாதிகள் பட்டியலில் நடிகர் சல்மான் கான் பெயரை சேர்த்து பாக்., அரசு அடாவடி

27 ஐப்பசி 2025 திங்கள் 09:00 | பார்வைகள் : 168


பலுசிஸ்தானை தனி நாடு போல் குறிப்பிட்டு சவுதி அரேபியாவில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் பேசியதால், அவரது பெயரை பயங்கரவாதிகள் பட்டியலில் பாகிஸ்தான் அரசு சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் சமீபத்தில் நடந்த 'ஜாய் போரம் - 2025' என்ற நிகழ்ச்சியில், சக பாலிவுட் நடிகர்களான ஷாருக் கான் மற்றும் அமீர் கானுடன், சல்மான் கான் பங்கேற்றார். அப்போது மேற்காசியாவில் இந்திய சினிமாவின் செல்வாக்கு குறித்து பேசும்போது, அவர் குறிப்பிட்ட வார்த்தைகள் சர்ச்சையை எழுப்பியுள்ளன.

நீங்கள் ஒரு ஹிந்தி திரைப்படம் எடுத்து சவுதி அரேபியாவில் வெளியிட்டால், அது சூப்பர் ஹிட் ஆகும். தமிழ், தெலுங்கு அல்லது மலையாள திரைப்படத்தை உருவாக்கினால், அது பல நுாறு கோடிகளை சம்பாதிக்கும். ஏனென்றால், பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்துள்ளனர். இங்கு, பலுசிஸ்தானைச் சேர்ந்த மக்கள் உள்ளனர்; ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த மக்கள் உள்ளனர்; பாகிஸ்தானைச் சேர்ந்த மக்கள் உள்ளனர், அனைவரும் இங்கு வேலை செய்கிறார்கள்,'' என சல்மான் கான் பேசியிருந்தார்.பாகிஸ்தான், பலுசிஸ்தானை தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக கருதுகிறது.

இந்நிலையில், சல்மான் கான் அதை ஒரு தனி நாடு போல் குறிப்பிட்டது பிரிவினைவாதத்தை ஆதரிப்பது போல உள்ளது என பலரும் விமர்சித்துள்ளனர். இதையடுத்து, பாகிஸ்தான் அரசு, பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் கீழ் உள்ள நான்காவது அட்டவணையில், சல்மான் கானின் பெயரை சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இந்த அட்டவணை, பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்களை கண்காணிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதில் சேர்க்கப்பட்டால், கடும் கண்காணிப்பு, கட்டுப்பாடுகள் மற்றும் சட்ட நடவடிக்கை ஆகியவற்றை எதிர்கொள்ள நேரிடும். எனினும், இந்த அறிவிப்பின் நம்பகத்தன்மை இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்