‘சூர்யா 46’ குறித்து அப்டேட் கொடுத்த ஜி.வி. பிரகாஷ் !

23 ஐப்பசி 2025 வியாழன் 12:02 | பார்வைகள் : 215
நடிகர் சூர்யா தற்போது தனது 46வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 46 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களின் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்குகிறார். சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசை அமைக்கிறார்.
இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்தும் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மேலும் ரவீனா டாண்டன், அனில் கபூர் ஆகியோரும் நடிப்பதாக சொல்லப்படுகிறது.மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் இந்த படத்திற்கு ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே தகவல் கசிந்தது. இதற்கிடையில் இந்த படத்தின் பூஜை சிறப்பாக நடந்து முடிந்த நிலையில், படப்பிடிப்புகளும் ஐதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் இப்படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.அதன்படி ஜி.வி. பிரகாஷிடம் ரசிகர் ஒருவர், “அந்த சூர்யா 46 பாடல்கள் எப்படி வந்திருக்கு? ஏதாச்சு சொல்லுங்க” என்று கேட்டுள்ளார். அதற்கு ஜி.வி. பிரகாஷ், “தாறுமாறா வந்திருக்கு. இயக்குனர் மற்றும் ஹீரோ இருவருடனும் தேசிய விருது கூட்டணி” என்று குறிப்பிட்டு பதில் அளித்துள்ளார்.
ஜி.வி. பிரகாஷ், சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப் போற்று’ படத்திற்காகவும், வெங்கி அட்லுரி இயக்கத்தில் வெளியான ‘வாத்தி’ படத்திற்காகவும் இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.