இரண்டு நாள் மழையால் 20 லட்சம் டன்! நெல் வீண்: விவசாயிகள் அவதி

23 ஐப்பசி 2025 வியாழன் 15:08 | பார்வைகள் : 143
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக, டெல்டா மாவட்டங்களில், 20 லட்சம் டன் நெல் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சாகுபடி அதிகரிக்கும் என்பது முன்கூட்டியே தெரிந்திருந்தும், நெல் கொள்முதலுக்கு போதுமான ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகள் திட்டமிடாததால், விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில், நடப்பாண்டு 6.50 லட்சம் ஏக்கரில் குறுவை பருவ நெல் சாகுபடி நடந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் மட்டும் கடந்தாண்டை காட்டிலும், 13 சதவீதம் உற்பத்தி அதிகரித்துள்ளது.
நடப்பாண்டு நெல் கொள்முதல் செய்வதற்கு, தனியார் வியாபாரிகள் ஆர்வம் காட்டவில்லை.
காத்திருப்பு
இதனால், அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை நோக்கி, செப்டம்பர் 1 முதல் விவசாயிகள் படையெடுத்து வருகின்றனர். நெல் உற்பத்தி அதிகரித்த நிலையில், கொள்முதல் நிலையங்கள் தாமதமாகவே திறக்கப்பட்டன.
நெல் பிடிப்பதற்கு தேவையான சாக்கு மூட்டைகள், தைப்பதற்கு சணல் பைகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்படவில்லை. நெல் அறுவடை பணிகள் கடந்த 1ம் தேதி முதல் தீவிரம் அடைந்தன.
சுமை துாக்கும் தொழிலாளர்கள் தட்டுப்பாடு, நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்வதற்கு தேவையான லாரிகள் இல்லாதது போன்ற பிரச்னைகளால், கொள்முதல் நிலையங்களுக்கு வெளியே, 10 நாட்களுக்கும் மேலாக, நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
ஏற்கனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரவை செய்து அரிசியாக்கும் பணியும் இதுவரை துவக்கப்படவில்லை. செறிவூட்டப்பட்ட அரிசி கலப்பதற்கு, இப்போது தான் தமிழக அரசு வாயிலாக, 'டெண்டர்' விடப்பட்டு உள்ளது. இதனால், நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, நெல் அதிகம் விளையும் திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலுார், திருப்பத்துார், விழுப்புரம், ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களிலும், கடந்த இரண்டு நாட்களாக மழை கொட்டி தீர்த்துள்ளது.
விற்க முடியாத நிலை
இதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் மட்டும், 20 லட்சம் டன் அளவுக்கு நெல் தேக்கம் அடைந்துள்ளது. மழையால் நெல் மணிகள் முளைக்கத் துவங்கி உள்ளன.
இதனால், கடன் வாங்கியும், வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் நகைகளை அடகு வைத்தும், விவசாயிகள் சாகுபடி செய்த நெல்லை விற்க முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.
நெல்லின் ஈரப்பதம் அதிகரித்து வரும் நிலையில், 22 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய, மத்திய அரசிடம் தமிழக உணவுத் துறை அனுமதி கோரியுள்ளது.
அனுமதி இன்னும் கிடைக்காததால், நிலைமை மோசமாகி வருகிறது. இதனால், நெல் சாகுபடி செய்த விவசாயிகள் பெரிய அளவில் நஷ்டத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.