Paristamil Navigation Paristamil advert login

143 வேட்பாளர்களை அறிவித்தார் தேஜஸ்வி ராகுலுக்கு மூக்குடைப்பு

143 வேட்பாளர்களை அறிவித்தார் தேஜஸ்வி ராகுலுக்கு மூக்குடைப்பு

21 ஐப்பசி 2025 செவ்வாய் 13:13 | பார்வைகள் : 192


பீஹார் சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டை இறுதி செய்யாமல், காங்கிரஸ் எம்.பி., ராகுல் இழுத்தடித்து வந்ததால் கடுப்பான ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ், அவரை மூக்குடைப்பு செய்யும் வகையில், 143 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை நேற்று அறிவித்தார். இதனால், ஒற்றுமையாக இருப்பதாக தெரிவித்து வந்த 'இண்டி' கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தமுள்ள 243 சட்டசபை தொகுதிகளுக்கு, இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

வேட்பு மனு நவ., 6ல், 121 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடக்கும் நிலையில், மீதமுள்ள 122 தொகுதிகளில், நவ., 11ல் இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு நடக்கிறது. நவ., 14ல் ஓட்டுகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இத்தேர்தலில், பா.ஜ., - காங்., கூட்டணிகள் இடையே பலத்த போட்டி நிலவுகிறது. புது போட்டியாளராக, தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் தேர்தல் களத்தில் குதித்துள்ளது. தே.ஜ., கூட்டணியை பொறுத்தவரை தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டு, தேர்தல் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

அதன்படி பா.ஜ., - நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், தலா 101 தொகுதிகளில் போட்டியிட உள்ள நிலையில், மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி ராம்விலாஸ், 29 தொகுதிகளில் களம் காண்கிறது.

காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளம் அடங்கிய கூட்டணி, தேசிய அளவில் 'இண்டி' என்ற பெயரிலும், பீஹாரில் 'மகாகத்பந்தன்' என்ற பெயரிலும் செயல்படுகின்றன.

முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலே முடிந்துவிட்ட நிலையில், 'மகாகத்பந்தன்' கூட்டணியில் இதுவரை தொகுதி பங்கீடு இறுதியாகவில்லை. அதே சமயம், அக்கட்சிகளின் நிர்வாகிகள் வேட்புமனு தாக்கல் செய்து விட்டனர்.

கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகனும், பீஹார் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவை ஏற்க, காங்., முதலில் மறுத்தது. பல கட்ட பேச்சுக்கு பின், அவரை முதல்வர் வேட்பாளராக காங்., அறிவித்தது.

மகாகத்பந்தன் கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதியாகாத நிலையில், சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 143 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை நேற்று ராஷ்ட்ரீய ஜனதா தளம் வெளியிட்டது. இதன் மூலம், மொத்தமுள்ள 243 தொகுதிகளில், 143ல் அக்கட்சி போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.

கடந்த 2020ல் நடந்த சட்டசபை தேர்தலில், 144 தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட்ட நிலையில், இந்த முறை அதை விட ஒரு தொகுதி குறைவாக போட்டியிடுகிறது. முக்கிய வேட்பாளர்களில், தேஜஸ்வி யாதவ் - ரகோபூர்; சந்திரசேகர் - மாதேபுரா; வீணா தேவி - மோகாமா; உதய் நாராயண் சவுத்ரி - ஜாஜா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

புதிய குழப்பம் தொகுதி பங்கீடை இறுதி செய்யாமல், காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் இழுத்தடித்து வந்ததால், அவரை மூக்குடைப்பு செய்யும் வகையில், வேட்பாளர்கள் பட்டியலை தேஜஸ்வி வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

தொகுதி பங்கீட்டை இறுதி செய்வது தொடர்பாக, தேஜஸ்வி பல முறை ராகுலை அணுகியதாகவும், அவர் நாட்களை கடத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனாலேயே, காங்., தலைவர்களிடம் தகவல் தெரிவிக்காமல் வேட்பாளர்கள் பட்டியலை தேஜஸ்வி யாதவ் வெளியிட்டதாக சொல்லப் படுகிறது. இது, 'இண்டி' கூட்டணியில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கிடையே, சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஆறு பேர் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை, காங்கிரசும் நேற்று வெளியிட்டது. இதன் மூலம், 60 தொகுதிகளில் அக்கட்சி போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. ஏற்கனவே, 54 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை காங்., அறிவித்திருந்தது.

மகாகத்பந்தன் கூட்டணியில் முறையான தொகுதி பங்கீடு அறிவிப்பு வெளியாகாத நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்., போட்டி போட்டு வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது, நிர்வாகிகளிடையே குழப் பத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், விரைவில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய வேண்டும் என்பதே அக்கூட்டணி நிர்வாகிகளின் எதிர் பார்ப்பாக உள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்