Paristamil Navigation Paristamil advert login

அஜய் ரஸ்தோகியை சந்திக்கிறது விஜய் தரப்பு; நடந்ததை விவரித்து ஆதாரங்களை அளிக்க முடிவு

அஜய் ரஸ்தோகியை சந்திக்கிறது விஜய் தரப்பு; நடந்ததை விவரித்து ஆதாரங்களை அளிக்க முடிவு

21 ஐப்பசி 2025 செவ்வாய் 07:13 | பார்வைகள் : 157


கரூரில் 41 பேர் நெரிசலில் சிக்கி உயிரிழந்த விவகாரத்தில், தங்களிடம் இருக்கும் விபரங்களையும் ஆதாரங்களையும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகியை சந்தித்து அளிக்க த.வெ.க., முடிவெடுத்துள்ளது.

கடந்த மாதம் 27ம் தேதி இரவில், நடிகர் விஜய் பிரசார கூட்டத்திற்கு வந்தோர் நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்து போன சம்பவத்தைத் தொடர்ந்து, நடிகர் விஜய், திருச்சி வழியாக சென்னைக்கு வந்தார். அதன்பின், அவர் கரூருக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை இன்று வரை சந்திக்கவில்லை. ஆனால், அவருடைய கட்சி நிர்வாகிகள் மட்டும் ஓரிருவர், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதற்கிடையில், செல்போன் வாயிலாக வீடியோ காலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிலரிடம், சென்னையில் இருந்தபடியே பேசினார் நடி கர் விஜய்.

தொடர்ந்து, நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு வழங்குவதாக அறிவித்த இழப்பீட்டுத் தொகையான தலா 20 லட்ச ரூபாய்க்கான தொகையை வங்கிக் கணக்கில் செலுத்தி இருக்கிறார் விஜய்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நேரில் விஜய் ஆறுதல் கூற விரும்புகிறார். இதற்காக, போலீஸ் அனுமதி கேட்டு த.வெ.க.,வினர் தீவிரமாக முயன்று வருகின்றனர். கரூர் செல்ல திட்டமிடும் விஜய்க்கு பாதுகாப்பு கேட்டு, டி.ஜி.பி., அலுவலகத்தில் மனு அளித்தனர். ஆனால், மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அணுகி கடிதம் கொடுத்து, அனுமதி பெற்றுக் கொள்ளுங்கள் என டி.ஜி.பி., அலுவலகத்தில் சொல்லிவிட்டனர்.

இதையடுத்து, த.வெ.க.,வினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை அணுகி கடிதம் கொடுத்து காத்துக் கொண்டுள்ளனர்; ஆனால், உரிய அனுமதி அளிக்கப்படவில்லை.

இதனால், நடிகர் விஜய் கரூர் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்கும் நிகழ்வு தள்ளிக் கொண்டே போகிறது.

இதற்கிடையில் உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, கரூர் நெரிசல் மரணம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கத் துவங்கி உள்ளது. இதற்காக, கரூரில் முகாமிட்டிருக்கும் சி.பி.ஐ., அதிகாரிகள், முதல் கட்டமாக தமிழக போலீசாரிடம் இருந்து, வழக்கு தொடர்பான ஆவணங்களையும் ஆதாரங்களையும் பெற்றுள்ளனர்.

வரும் வாரத்தில் முழு வேகத்தில் விசாரணையை துவங்கவிருப்பதாக சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் முதல்கட்டமாக, அதிகாரிகளை த.வெ.க., தரப்பில் சந்திக்க உள்ளனர். அப்போது, கரூர் விஜய் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது தொடர்பாக, தங்களுக்கு கிடைத்திருக்கும் விபரங்கள் அனைத்தையும் அளிக்கவிருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் கூறின.

இது குறித்து, த.வெ.க., வட்டாரங்கள் மேலும் கூறியதாவது:

கரூரில் நடிகர் விஜயின் பிரசாரம் கூட்டம் நடத்துவதற்காக த.வெ.க., தலைமையில் திட்டமிட்டது முதல் நெரிசலில் சிக்கில் 41 பேர் உயிர் இழந்தது வரை, எல்லா விஷயங்களும் த.வெ.க.,வால் தொகுக்கப்பட்டுள்ளது.

அதில் போலீசார், அரசுத் துறை அதிகாரிகள், த.வெ.க., நிர்வாகிகளிடம் பேசிய பேச்சு, அளித்த நிபந்தனைகள் என எல்லா விபரங்களையும் சொல்லப்பட்டுள்ளன. அதேபோல, கூட்ட நெரிசலில் சிக்கியோர் சிலரை, முகம் தெரியாத சிலர் கழுத்தில் ஏறி நின்று மிதித்தது, விஜயை நோக்கி செருப்பு வீசியது, பொதுமக்களில் சிலரின் முதுகில் கத்தியால் கீறி; குத்தியது, மக்களை விரட்டியடிக்க போலீசார் தடியடி நடத்தியது உள்ளிட்ட சந்தேகப்படும்படியாக நடந்த அனைத்து நிகழ்வுகளும் தொகுக்கப்பட்டுள்ளன. அதற்கான சாட்சியங்கள், சி.சி.டி.வி., பதிவுகள் ஆகியவற்றையும் சி.பி.ஐ., அதிகாரிகளிடம் முதல் கட்டமாக த.வெ.க.,வினர் அளிக்க உள்ளனர்.

சி.பி.ஐ., விசாரணையை கண்காணிப்பதற்காக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டிருக்கும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி, அடுத்த வாரம் கரூர் வருவதாக சொல்லப்படுகிறது. அப்படி அவர் கரூரில் முகாமிட்டால், அவரையும் த.வெ.க., தரப்பில் சந்திக்க உள்ளனர். தங்களிடம் உள்ள ஆதாரங்களை த.வெ.க.,வினர் அவரிடமும் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு அவ்வட்டாரங்கள் கூறின.

வர்த்தக‌ விளம்பரங்கள்