வி.சி., வெளியேறினால் தீபாவளி: திருமாவளவன் பரபரப்பு பேச்சு

20 ஐப்பசி 2025 திங்கள் 08:26 | பார்வைகள் : 166
உரசல் ஏற்பட வேண்டும் என, விரும்புவோர், தி.மு.க., கூட்டணி வேண்டாம் என, நான் அறிக்கை விட்டால், தீபாவளி பண்டிகை போல் கொண்டாடுவர்,'' என, வி.சி.க., தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
செங்கல்பட்டில் நடந்த வி.சி., பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பா.ஜ., வுக்கு நேரடி எதிரியாக இருப்பது வி.சி., தான். பா.ஜ.,வா, வி.சி.,யா என்றால் பிரச்னை இல்லை. இதை ஜாதியாக கொண்டு செல்வது தான் பிரச்னை. அவர்கள் முன்னால் நிற்கும்போது, குறிப்பிட்ட சமூகத்திற்கு எதிரானவர்கள் என்கிற பொய்யான நோக்கத்தை பரப்புகின்றனர். இது முழுக்க, முழுக்க அரசியல். இதன் வாயிலாக, தி.மு.க.,வுக்கும், வி.சி.க.,வுக்கும் உரசல் ஏற்பட வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம்.
தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் இருந்து, வி.சி., வெளியேறி விட்டால், யாரும் நம்மை பற்றி பேச மாட்டார்கள். அவர்களின் வேலை முடிந்து விடும். இவ்வளவு பிரச்னைகளுக்கு ஒரே காரணம், வி.சி., - அ.தி.மு.க., பக்கம் போகவில்லை. பா.ஜ.,வுடன் உறவாடவில்லை என்பதுதான்.
சனாதன எதிர்ப்பை, திருமாவளவன் உயர்த்தி பிடிக்கிறார். தி.மு.க., கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்க, உற்ற துணையாக இருக்கிறாரே. இதுதான் பிரச்னை. நாளை தி.மு.க., கூட்டணி வேண்டாம் என, நான் அறிக்கை வெளியிட்டால், ஆஹா, ஓஹா என மகிழ்ச்சி அடைவர். ஏன் இன்னொரு தீபாவளி பண்டிகை போல் கொண்டாடுவர். இவ்வாறு அவர் பேசினார்.