Paristamil Navigation Paristamil advert login

குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலை இந்தியா முழுதும் உள்ளது: அண்ணாமலை

குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மனநிலை இந்தியா முழுதும் உள்ளது: அண்ணாமலை

24 கார்த்திகை 2025 திங்கள் 13:53 | பார்வைகள் : 101


பீஹார் மாநிலத்தை போல தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணி தர்மத்தை பா.ஜ., கடைபிடிக்கும்,'' என, சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரில் தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

பீஹாரில் முதல்வர் நிதிஷ்குமார் பெண்கள் முன்னேற்றத்திற்கும், வேலைவாய்ப்பை உருவாக்கவும் ஒரு திட்டம் கொண்டு வந்தார். முதற்கட்டமாக 10,000 ரூபாய் கொடுத்தனர். மீதமுள்ள தொகையை விரைவில் வழங்கவுள்ளனர். தேர்தல் முடிந்து விட்டது.

தேர்தலுக்காக என்னவெல்லாம் சொன்னார்களோ, அதை நிதிஷ் குமார் வரிசையாக செய்து முடிப்பார்.

அதே போல் காங்கிரசும் நாங்கள் வெற்றி பெற்றால் 2 லட்சம், 3 லட்சம் ரூபாய் வரை கொடுப்போம் என்கின்றனர். ஆனால், பீஹார் மக்கள் காங்கிரசை நம்பவில்லை.

கடந்த 25 ஆண்டுகளில் 20 ஆண்டுகள் முதல்வராக இருந்த நிதிஷ்குமார் மீது நம்பிக்கை வைத்து, மறுபடியும் ஆட்சி பொறுப்பை அளித்துள்ளனர். பீஹாரில் காங்கிரசுக்கு எப்படி படுதோல்வி ஏற்பட்டதோ, அதை நிலைதான் தமிழகத்திலும் வரும்.

இந்த உண்மை தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தெரிந்து விட்டது. அதனால் தான், பீஹாரில் பா.ஜ., கூட்டணி வெற்றி பெற்றதை, தவறாகப் பேசுகிறார்.

குடும்ப ஆட்சி வேண்டாம் என்ற மக்களின் நிலை, இந்தியா முழுதும் இருக்கும் மக்களிடமும் இருக்கிறது. அது பீஹாரிலும் இருந்தது. தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்று விட்டது. பீஹாரில், கடந்த 2020ல் நடந்த சட்டசபைத் தேர்தலில், பா.ஜ.,வை விட ஐக்கிய ஜனதா தளம் கட்சி குறைந்த எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.,க்களை பெற்று இருந்தது.

ஆனாலும், நிதிஷ் குமார் முதல்வர் ஆக்கப்பட்டார். இப்போதும், அவரே முதல்வர் ஆக்கப்பட்டுள்ளார். இதற்கு காரணம் கூட்டணி தர்மம் தான்.

காங்., எந்த மாநிலத்திலும் அப்படி நடந்து கொண்டதில்லை. காங்., எப்படி ஜனநாயகம் பற்றி பேச முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்