சமாதான ஒப்பந்தமானது உக்ரைனுக்கான கடைசி தீர்வல்ல - ட்ரம்ப்
23 கார்த்திகை 2025 ஞாயிறு 08:48 | பார்வைகள் : 130
ட்ரம்பின் சமாதான ஒப்பந்தமானது 1938ல் அடோல்ஃப் ஹிட்லருடன் நெவில் சேம்பர்லைனின் மியூனிக் ஒப்பந்தத்தை நினைவூட்டுவதாக உக்ரைன் தரப்பு கொந்தளித்துள்ளது.
ரஷ்யாவிடம் உக்ரைனை ஒப்படைக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் சூழ்ச்சி இதுவென கடும் எதிர்ப்பலை கிளம்பியதும், தனது சமாதான ஒப்பந்தமானது உக்ரைனுக்கான கடைசி தீர்வல்ல என ட்ரம்ப் பின்வாங்கியுள்ளார்.
சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், உக்ரைனில் அமைதி திரும்ப வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது.
இது ரொம்ப நாளைக்கு முன்னரே நடந்திருக்கணும். நாங்கள் அதை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கிறோம், ஏதாவது ஒரு வழியில் நாங்கள் அதை முடிவுக்குக் கொண்டு வந்தே ஆக வேண்டும் என்றார்.
ட்ரம்பின் ரஷ்ய சார்பு சமாதான ஒப்பந்தம் தொடர்பில் விவாதிக்க உக்ரேனிய மற்றும் அமெரிக்க அதிகாரிகள் குழு ஞாயிற்றுக்கிழமை சுவிட்சர்லாந்தில் சந்திக்கவுள்ளனர்.
இதனிடையே, முக்கிய திருப்பமாக, அந்த சமாதான ஒப்பந்தமானது ட்ரம்ப் நிர்வாகத்தின் திட்டம் அல்ல என்றும், அது ரஷ்யா முன்வைக்கும் அவர்களின் விருப்பப் பட்டியல் என்றும் வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ அமெரிக்க செனட்டர்கள் மத்தியில் பேசியதாக தகவல் கசிந்துள்ளது.
ஆனால் அது உண்மை அல்ல என பின்னர் வெளிவிவகாரத்துறை மறுத்துள்ளது. வியாழக்கிழமைக்குள் குறித்த 28 அம்ச சமாதான ஒப்பந்தத்தை ஜெலென்ஸ்கி அங்கீகரிக்க வேண்டும் என ட்ரம்ப் கெடு விதித்துள்ளார்.
இந்த நிலையில், வரும் நாட்களில் உக்ரைன் தனது தேசிய கண்ணியத்தைப் பேணுவதற்கும், அமெரிக்கா போன்ற ஒரு முக்கிய கூட்டாளியை இழப்பதற்கும் இடையே ஒரு சாத்தியமற்ற தெரிவை முன்னெடுக்க இருப்பதாக ஜெலென்ஸ்கி நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.
அத்துடன், ஜனாதிபதி ஆணையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழுவை அவர் அறிவித்தார், அவர்கள் விரைவில் ஜெனீவாவில் அமெரிக்க குழுவினரை சந்திக்கவுள்ளனர்.
அமெரிக்கா முன்வைத்துள்ள சமாதான ஒப்பந்தமானது ரஷ்யாவிற்கு ஆதரவானது என்பதை உலக நாடுகள் விவாதிக்கத் தொடங்கியுள்ளன.
உக்ரைனின் இறையாண்மையை விட்டுக்கொடுக்கவோ அல்லது நாட்டின் தற்போதைய எல்லைகளை உள்ளடக்கிய ஒரு அரசியலமைப்பை கைவிடவோ முடியாது என்பதை ஜெலென்ஸ்கி தெளிவுபடுத்தியுள்ளார்.
இதனிடையே, தென்னாப்பிரிக்காவில் நடந்த கூட்டத்தில், ஜி20 தலைவர்களும் ஐரோப்பிய கவுன்சிலும் ட்ரம்பின் சமாதான ஒப்பந்ததை புறந்தள்ளி ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ உறுப்பினர்களுடன் அதன் சில விதிகள் குறித்து ஆலோசிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
உக்ரைன் மட்டுமல்ல, ஐரோப்பாவின் பிற பகுதிகளிலும் மற்றொரு ரஷ்ய படையெடுப்பிற்கான ஒரு வரைவு ஒப்பந்தம் இது என்று அரசியல் விமர்சகர்கள் எச்சரித்துள்ளனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan