2 குழந்தைகளை பெற்றெடுத்த 68 வயதுடைய பெண்ணின் சட்டப் போராட்டம்
21 கார்த்திகை 2025 வெள்ளி 17:33 | பார்வைகள் : 264
கணவருக்கு தெரியாமலேயே பிறந்த, 14வது மற்றும் 15வது குழந்தைகளுக்காக அமெரிக்காவைச் சேர்ந்த, 68 வயது பெண், சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்.
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்தவர் மேரிபெத் லுாயிஸ். இவர், தன் 62 வயதில், 13-வது குழந்தை பெற்றெடுத்து செய்திகளில் இடம்பிடித்தவர்.
அதில் முதல் ஐந்து குழந்தைகள் இயற்கையான கர்ப்பத்தில் பிறந்தவை. மற்ற குழந்தைகள் ஐ.வி.எப்., எனப்படும் செயற்கை கருத்தரித்தல் முறையில் பிறந்தவை.
மேரிபெத்தின் கணவர் பாப், இனிமேல் தங்களுக்கு குழந்தைகள் வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளார். ஆனால், குழந்தை பெற்றெடுப்பதில் ஆசை தீராத மேரிபெத், கணவருக்கு தெரியாமலேயே வாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுக்க முடிவு செய்தார்.
கடந்த 2023ல் வாடகை தாய் மூலம் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கான பெற்றோர் உரிமை சான்றிதழ், தபாலில் வந்தபோதுதான் மேரிபெத்தின் கணவர் பாப்பிற்கு விஷயமே தெரியவந்தது.
தனக்குத் தெரியாமல் குழந்தை பெற்றெடுத்த மனைவி மேரிபெத் மீது அவர் போலீசில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து அந்தக் குழந்தைகள், காப்பகத்தில் சேர்க்கப்பட்டன. குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்று மேரிபெத் நியூயார்க் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
மேரிபெத் பாப் தம்பதியே குழந்தை களின் சட்டப்பூர்வ பெற்றோர் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், குழந்தைகளை வளர்த்து வரும் காப்பகம், இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது.
மருத்துவமனையில் வாடகைத் தாய் ஒப்பந்தத்தில் கணவர் பெயரில், மேரிபெத் போலியாக கையெழுத்திட்டுள்ளார்.
மேலும், நீதிமன்ற விசாரணையின்போது, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக கணவர் ஆஜராவதுபோல் மேரிபெத் ஆள்மாறாட்டம் செய்ததும் தெரியவந்துள்ளது. இதனால், 14 மற்றும் 15வது குழந்தை களைப் பெறுவதற்கான, மேரிபெத் சட்டப் போராட்டம் தொடர்கிறது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan