Paristamil Navigation Paristamil advert login

சீனா - ஜப்பான் மோதல் - கடல் உணவுகளுக்கு மீண்டும் தடை

சீனா - ஜப்பான் மோதல்  -  கடல் உணவுகளுக்கு மீண்டும் தடை

20 கார்த்திகை 2025 வியாழன் 17:25 | பார்வைகள் : 288


ஜப்பானியப் பிரதமர் சனாய் டகாயிச்சி தைவான் குறித்து பேசிய கருத்துக்களால் இரு நாடுகளுக்கும் இடையேயான இராஜதந்திர மோதல் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில், சீனா மீண்டும் ஜப்பானிய கடல் உணவுகள் இறக்குமதிக்கு தடை விதிக்கவுள்ளதாக ஜப்பானிய ஊடகங்களை மேற்கோள்காட்டி அல்ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
சீனா தனது கடல் உணவு இறக்குமதி மீதான தடையை இந்த மாதத் ஆரம்பத்தில் நீக்கியிருந்தது.

ஆனால், ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீர், கடலில் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, 2023 இல் விதிக்கப்பட்டிருந்த அந்தத் தடை இப்போது மீண்டும் விதிக்கப்படுவதாக ஜப்பானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபுகுஷிமாவில் இருந்து பசிபிக் கடலில் வெளியிடப்படும் நீர் குறித்து மேலும் கண்காணிப்பு தேவை என்பதன் காரணமாகவே, இந்தத் தடை மீண்டும் விதிக்கப்படுவதாக சீனா ஜப்பானிடம் தெரிவித்ததாக கியோடோ செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்தத் தடை, ஜப்பானியப் பிரதமர் சனாய் டகாயிச்சியின் தைவான் குறித்த கருத்துக்களால் டோக்கியோவுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள ஆழமான நெருக்கடிக்கு மத்தியில் வந்துள்ளது.

ஜப்பானின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் தைவான் மீதான சீனத் தாக்குதல், டோக்கியோவின் இராணுவ நடவடிக்கையைத் தூண்டும் சில சம்பவங்களில் ஒன்றாகும் என்று நவம்பர் 7 அன்று பிரதமர் டகாயிச்சி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

டகாயிச்சியின் இந்தக் கருத்துக்களுக்கு சீன அதிகாரிகள் மற்றும் அரச ஊடகங்கள் பல விமர்சனங்களை முன்வைத்தன.

பெய்ஜிங், சீனக் குடிமக்கள் ஜப்பானுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியதுடன், பிரதமர் டகாயிச்சி தனது கருத்துக்களைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரியது. ஆனால், பிரதமரின் கருத்துக்கள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு ஏற்பவே உள்ளன என்று டோக்கியோ குறிப்பிட்டுள்ளது.

சமீபத்திய கடல் உணவுத் தடைக்கு முன், ஜப்பானின் கடல் உணவு ஏற்றுமதியில் ஐந்தில் ஒரு பங்குக்கும் அதிகமானவை சீனாவைச் சார்ந்திருந்தன.

இந்தச் சர்ச்சை இரு நாடுகளின் உறவுகளில் பிற பகுதிகளிலும் தாக்கியுள்ளது. சீன அரச ஆதரவுடைய ஊடகமான China Film News, இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு ஜப்பானியத் திரைப்படங்களின் வெளியீடு ஒத்திவைக்கப்படும் என்று அறிவித்துள்ளது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்