Paristamil Navigation Paristamil advert login

தவெகவினருக்கு எஸ்ஐஆர் விண்ணப்ப படிவம் மறுப்பு; விஜய் புது குற்றச்சாட்டு

தவெகவினருக்கு எஸ்ஐஆர் விண்ணப்ப படிவம் மறுப்பு; விஜய் புது குற்றச்சாட்டு

16 கார்த்திகை 2025 ஞாயிறு 09:52 | பார்வைகள் : 101


வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த விண்ணப்ப படிவத்தை தவெகவினருக்கு வேண்டுமென் றே ஆட்சியாளர்கள் தர மறுப்பதாக திமுக மீது தவெக தலைவர் விஜய் குற்றம்சாட்டியுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியதாவது; இந்திய அரசியல் சாசனம் நம் தமிழகத்தில் இருக்கும் அனைவருக்கும் கொடுத்திருக்கும் உரிமையில் மிகவும் முக்கியமானது வாக்குரிமை. ஒரு மனிதன் உயிருடன் இருப்பதற்கு அடையாளமாக இருப்பதில் அவனுடைய வாக்குரிமை ரொம்ப முக்கியம். வாக்குரிமை வெறும் உரிமை மட்டுமல்ல, நம்ம வாழ்க்கை.

தமிழகத்தில் இருக்கும் நம்ம யாருக்குமே ஓட்டுப்போடும் உரிமை இல்லை என்றால், நீங்கள் நம்புவீங்களா? நான் பயமுறுத்தவதாக நினைக்க வேண்டாம். அதுதான் நிஜமும் கூட. கொஞ்சம் ஏமாந்தால் நம்மளைப் போல லட்சக்கணக்கான பேருக்கும் இதே நிலைமை தான். ஓட்டுப்போடும் உரிமை இல்லாத மாதிரியான நிலைமை வந்தாலும் வரலாம். இதுக்கு முக்கிய காரணம் அந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தான்.

உரிமை இல்லை

கடந்த ஜனவரி மாதம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில், 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் தமிழகத்தில் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாருக்குமே இந்த ஓட்டுப்போடும் உரிமை இல்லை. பிஎல்ஓக்கள் கொடுக்கும் படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்தால், அதனை பரிசீலனைக்கு எடுக்கும் தேர்தல் ஆணையம், புதிய வாக்காளர் பட்டியலை வெளியிடும். அந்த வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள். அந்தப் பட்டியலில் நம் பெயர் இருந்தால் தான் நாம் ஓட்டுப்போட முடியும். அந்தப் புது பட்டியல் வரும் வரை, நாம் வாக்காளர்களாக என்பதை உறுதி செய்ய முடியாது. ஒருவேளை அந்தப் பட்டியலில் நம் பெயர் இல்லையெனில், புதிய படிவத்தை மீண்டும் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

சந்தேகங்கள்

புது வாக்காளர்கள் படிவம் 6 என்பதை பூர்த்தி செய்து பிஎல்ஓக்களிடம் நேரடியாக கொடுக்கலாம். ஆன்லைன் மூலம் சமர்ப்பித்தால், அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்த வைத்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் கூட இதனை செய்யலாம்.

இதை எல்லாம் சரியாக செய்தாலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மீது சில சந்தேகங்கள் உள்ளன. 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்களுக்கு ஒரே மாதத்தில் எப்படி விண்ணப் படிவங்களை கொடுக்க முடியும். அதிகாரிகள் வரும் போது வீட்டில் யாரும் இல்லாவிட்டால் என்ன செய்வார்கள்? இதில், பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் உழைக்கும் மக்கள், ஏழைகள், வேலைக்கு செல்லும் பெண்கள் தான். இவர்களுக்கு யார் சரியான பதிலை சொல்வார்கள்.

ஒரு நியாயமான வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் எப்படி நடக்க வேண்டும். இறந்து போனவர்கள், போலி வாக்காளர்களை குறிப்பிட்டு நீக்க வேண்டும். ஏற்கனவே ஓட்டு இருப்பவர்களுக்கு மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்ற பெயரில் இவ்வளவு குழப்பங்கள் என்பது தான் கேள்வி? புதிய வாக்காளர்கள், ஓட்டு இல்லாதவர்களை மட்டும் சேர்த்தால் போதாதா?

2021 மற்றும் 2024ல் ஓட்டு போட்டவர்களும் இப்போது மீண்டும் பதிவு செய்வது என்பது தான் குழப்பம். இதன் காரணமாகத் தான் நாங்கள் இந்த திருத்தத்தை எதிர்க்கிறோம்.

ஆட்சியாளர்கள் தான்

புதிது புதிதாக புகார்கள் எழுகின்றன. தவெக தொண்டர்களுக்கு படிவங்கள் கொடுப்பதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. இதை யார் செய்கிறார்கள் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. இப்போது இருக்கும் ஆட்சியாளர்களும், அவர்களுக்கு கைப்பாவையாக இருக்கும் சிலர் தான் இதை செய்ய தொடங்கியுள்ளனர். எனவே, இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அனைவருக்கும் விண்ணப் படிவம் கிடைத்தாக வேண்டும். அப்படி கிடைக்காவிட்டாலும், ஆன்லைனில் இந்தப் படிவம் கிடைக்கும்.

வர்த்தக‌ விளம்பரங்கள்