Paristamil Navigation Paristamil advert login

டாக்டர் உமர் நபியின் வீடு தரைமட்டம்: தகர்த்து தள்ளியது பாதுகாப்பு படை

டாக்டர் உமர் நபியின் வீடு தரைமட்டம்: தகர்த்து தள்ளியது பாதுகாப்பு படை

15 கார்த்திகை 2025 சனி 11:02 | பார்வைகள் : 171


டில்லி வெடிகுண்டு வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான டாக்டர் உமர் நபியின் ஜம்மு - காஷ்மீர் வீடு, பாதுகாப்பு படையினரால் நேற்று முன்தினம் நள்ளிரவு வெடிமருந்து வைத்து தரைமட்டமாக்கப்பட்டது.

டில்லியில் உள்ள செங்கோட்டையில் போக்கு வரத்து சிக்னலில் நின்றிருந்த கார் ஒன்று, கடந்த 10ம் தேதி வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் காரை இயக்கிய டாக்டர் உமர் நபி உட்பட, 13 பேர் பலியாகினர்; 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பயங்கரவாத தாக்குதல் என அறிவிக்கப்பட்டுள்ள இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது-.

தாக்குதலில் ஈடுபட்ட உமர் நபி, பரிதாபாதில் உள்ள அல் பலாஹ் பல்கலையில் டாக்டராக பணியாற்றியதும், ஜம்மு - காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.

தாக்குதலைத் தொடர்ந்து, புல்வாமாவின் கோய்ல் கிராமத்தில் உள்ள உமரின் வீட்டில் பாதுகாப்பு படையினர், கடந்த சில நாட்களாக சோதனை நடத்தி வந்தனர். இதில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன; வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ஜெய்ஷ் - இ - முகமது உள்ளிட்ட பல பயங்கரவாத அமைப்புகளுடன் அவர் தொடர்பில் இருந்ததும் உறுதி செய்யப்பட்டது. இந்த சூழலில், அவரது வீட்டுக்கு போலீசார், சி.ஆர்.பி.எப்., எனப்படும் துணை ராணுவப் படையினர் அடங்கிய பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்றனர்.

பின்னர், டாக்டர் உமரின் வீடு பாதுகாப்பான முறையில் வெடி வைத்து தகர்க்கப்பட்டது. முழு வீடும் தரைமட்டமானதை அடுத்து, கட்டட இடிபாடுகளில் தடயவியல் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

உமரின் வீடு குண்டு வைத்து தகர்க்க முடிவு செய்யப்பட்டதை அடுத்து, சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர். இதையொட்டி, கோய்ல் கிராமம் மட்டுமின்றி புல்வாமா முழுதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது.

வர்த்தக‌ விளம்பரங்கள்